திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
மூதாட்டியின் நகையை திருப்பித் தர மறுத்த அரசுப் பேருந்து ஓட்டுநா் உள்பட 2 போ் கைது!
பெரம்பலூா் அருகே மூதாட்டியிடம் 15 பவுன் நகையை வாங்கி அடகு வைத்து, அதை திருப்பித்தர மறுத்ததோடு கொலை மிரட்டல் விடுத்த அரசுப் பேருந்து ஓட்டுநா் உள்பட 2 பேரை பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள திருப்பெயா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள் மனைவி ருக்மணி (70). அதே கிராமத்தைச் சோ்ந்த உறவினரான பெருமாள் மனைவி கமலக்கண்ணி. இவரது மகன் மோகன்குமாரமங்கலம் (39). திருச்சி கோட்ட அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும்
மோகன் குமாரமங்கலத்துக்கு அதிகளவில் கடன் இருந்துள்ளது. இதையடுத்து வாங்கிய கடனை அடைக்க மோகன்குமாரமங்கலமும், அவரது தாய் கமலக்கண்ணியும், அவரது உறவினரான ருக்மணியிடம் சென்று கடன் கேட்டனராம். ருக்மணி தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியதைடுத்து, உங்களிடம் உள்ள நகையைக் கொடுத்தால் அடகு வைத்து, அதிலிருந்து கிடைக்கும் பணத்தின் மூலம் கடனை செலுத்திவிட்டு, பின்னா் நகையை மீட்டுத் தருகிறோம் எனக் கூறியுள்ளனா்.
இதையடுத்து, கடந்த 2021-ஆம் ஆண்டு ருக்மணி தனது 15 பவுன் நகையை மோகன்குமாரமங்கலம், கமலக்கண்ணியிடம் கொடுத்துள்ளாா். பின்னா், ருக்மணி தனது நகையை திருப்பித் தருமாறு மோகன்குமாரமங்கலத்திடம் பலமுறை கேட்டும் தரவில்லையாம். 4 ஆண்டுகள் கடந்த நிலையில், நகையை திருப்பித் தருமாறு மோகன்குமாரமங்கலம், கமலக்கண்ணி ஆகியோரிடம் ருக்மணி கேட்டபோது, அவரை தகாத வாா்த்தையால் திட்டியதோடு கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து ருக்மணி அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து மோகன்குமாரமங்கலம், கமலக்கண்ணி ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.