எஸ்ஏ20 ஏலம்.. டெவால்டு பிரேவிஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்பட 500 வீரர்கள் பதிவு!
‘மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்’ - 70களின் சிறுவயது அனுபவங்களும், அழியாத நினைவுகளும் | #Chennaidays
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
சென்னை – மெட்ராஸாக இருந்தது அப்போது. நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவிகளை மட்டும் மெட்ராஸிற்கு 2 நாள் சுற்றுலா அழைத்துச் செல்ல பள்ளி நிர்வாகம் முடிவு செய்திருந்தது. ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த என் அக்காவும் சுற்றுலா செல்ல பேர் கொடுத்திருந்தது. நம்ம சும்மா இருப்பமா?? வீட்டில் அடம் பிடித்து, பள்ளியில் பர்மிஷன் வாங்கி, நானும் அக்காவுடன் அந்த சுற்றுலாவுக்கு சென்றது தான் மெட்ராஸிற்கு என் முதல் விஜயம். அப்போது பார்க்கும் எல்லாமே ஆச்சரியம் தான்.
“ஆ” னு வாய் பிளந்து வேடிக்கை பார்ப்பது என்று சொல்வார்களே… அதேதான். அண்ணாந்து பார்த்து அதிசயித்த எல்ஐசி பில்டிங், விஜிபி கோல்டன் பீச், மியூசியம், அண்ணா சமாதி மற்றும் பல இடங்கள்.

எனக்கு பயணம் செய்யும்பொழுது வாந்தி எடுக்கும் பழக்கம் கிடையாது. ஆனால், எங்க டீச்சர், “யாருக்கெல்லாம் வாந்தி வருமோ அவங்கெல்லாம் இந்த மாத்திரையை வாங்கிப் போட்டுக்கோங்க” அப்படின்னு சொல்லி ஒரு மாத்திரை கொடுத்தாங்க. சும்மா இருக்காமல் கொழுப்பெடுத்து நானும் ஒரு மாத்திரையை, மிட்டாய் மாதிரி வாங்கிப் போட்டுகிட்டேன். அந்த விளைவில், தூங்கியதில் ஒன்றிரண்டு இடங்களை பார்க்கத் தவற விட்டு வருந்தியதும் நடந்தது.
அப்போது “விஜிபி கோல்டன் பீச்” என்பது மெட்ராஸின் மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்று. அதன் வாயில் முதற்கொண்டு, உள்ளே இருந்த சிலைகள் அனைத்தும் பிரம்மாண்டமாக இருக்க, வேடிக்கை பார்த்துக் கொண்டே போனோம். அன்றைக்கு அங்கு “பாசப் பறவைகள்” படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. சினிமா சூட்டிங், நடிகர், நடிகைகளைப் பார்ப்பதெல்லாம் எங்களுக்கு ஆச்சரியம் தான். “தென்பாண்டித் தமிழே” பாடலில், வெள்ளை உடையில் மோகன், ராதிகா, சிவகுமார் எல்லோரும் வருவார்களே… அந்தக் காட்சியின் படப்பிடிப்பு. மூவரும் வெள்ளை உடையில் சேரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தோம். அது ஒரு பரவசம் அந்த வயதில்.
“விஜிபி கோல்டன் பீச்” ன் இன்னொரு புகழ்பெற்ற ஆச்சரியம் “சிரிக்காத சிலை மனிதர்”. முழு அலங்காரத்துடன், அப்படியே சிலை போலவே அசையாமல் நின்று கொண்டிருப்பார். சுற்றி நின்று மக்கள் என்னனவோ முயற்சி செய்தும் அவர் அசையக்கூட மாட்டார். அவரை சிரிக்க வைத்தால் ஏதோ பரிசெல்லம் கூட உண்டு என்று சொல்வார்கள் அப்போது.
ஊர் திரும்பும் முன், முன்னிரவு வேளையில், மீனம்பாக்கத்தில் விமான நிலையத்தின் வெளியில் நின்று, எங்க டீச்சர் “அங்க பாருங்க, அங்க பாருங்க .. விமானம் கிளம்புது” னு காட்டிய, வண்ண வண்ண விளக்குகள் மின்னப் பறக்கும் விமானத்தைப் பார்த்தது, இன்றும் நினைவில் நீங்காத பரவசம்.
இரண்டொரு வருடங்களில், சித்தப்பா திருவொற்றியூரில் இருந்தபோது பள்ளி விடுமுறைக்கு மீண்டும் மெட்ராஸ். ஒரு காம்பவுண்டுக்குள் நான்கு வீடுகள் வரிசையாக இருக்கும். சின்ன வீடு தான். ஆனால் எங்க வீட்ல எல்லாருக்குமே அந்த வீடு ரொம்பப் பிடிக்கும்.

விடுமுறை நாள்களில் எத்தனை பேர் அதில் இருந்திருக்கிறோம் என்று இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அந்த வீட்டின் எதிரில் இருந்த ஒரு சிறிய கோவில், அங்கு வரும் ஐய்யர், வெகு அருகில் இருந்த, எப்போதும் பரபரப்பாக இருக்கும் மார்க்கெட், மாணிக்கம் தியேட்டர், நடந்து செல்லும் தூரத்தில் இருந்த அம்மன் கோவில், பெருமாள் கோவில் என்று அந்த பகுதியில் அனைத்துமே எங்கள் அனைவருக்கும் வெகு பிடித்தம்தான்.
பக்கத்து வீடுகளிலும் எங்கள் வயதுள்ள சிறுவர்கள் இருந்தார்கள். பகலில் அவர்களுடன் விளையாட்டு, இரண்டு மூன்று தெரு தள்ளி உள்ள அஞ்சலகத்திற்கு நானும் என் அக்காவும் தனியே சென்று வருவது (அதெல்லாம் அப்போ ஒரு சாதனை.. “மெட்ராஸ் லயே தனியா போய்ட்டு வருவோம்.. தெரியும் ல” அப்படினு ஊருக்குப் போய் சொல்லிக் கொள்வதில் ஒரு தனி சுகம்), மாலையில் அருகில் இருந்த ஏதேனும் ஒரு கோவில், மார்க்கெட் போவது, பின் கருப்பு வெள்ளை “போர்ட்பிள்” டிவியில், வீட்டுக்கு வெளியில் நடைபாதையில் உட்கார்ந்து காற்று வாங்கிக் கொண்டே (இயற்கையோடு இணைந்து) டிவி பார்ப்பது, சித்தப்பாவின் விடுமுறை தினத்தில் பீச் போவது, மியூசியம் போவது என்று ஜாலியான, சந்தோஷமான சிறுவயது சென்னை விடுமுறை நினைவுகள் ஏராளம்.

ஒரு நாள் மதியம், சித்தப்பா எங்களிடம், “இன்னைக்கு சாயந்திரம் பீச் போகலாம்” அப்படின்னு சொன்னாங்க. உடனே, “அப்படினா, நாம் இன்னைக்கு வங்காள விரிகுடா பார்க்க போறமா?” அப்படின்னு நான் கேட்ட விதத்தில் சித்தி சிரித்த சிரிப்பு இன்றும் நினைவில் அழியாத சித்திரம். “அது ஹிஸ்டரில படிச்சத வச்சுட்டு அந்த மாதிரி கேக்குது. அதுல என்ன உனக்கு அப்படி ஒரு சிரிப்பு” அப்படின்னு சொல்லிட்டு சித்தப்பாவும் தான் சிரிச்சாங்க.
சூரியன் முழுதும் மறையாத அந்த இதமான மாலை வேளையில், பேருந்தில் பயணிக்கும் போது, கடற்கரை நிறுத்தத்தில் இறங்குவதற்கு முன்பே வந்து வரவேற்கும் கடற்கரைக் காற்று ஆனந்தம். அதிலும் பேருந்தில், ஜன்னலோர இருக்கை கிடைத்து அந்தக் காற்றை அனுபவித்தால் ஆனந்தமோ ஆனந்தம் தான்.
எப்போதும் ஜன்னல் சீட்டுக்கு வேற ஒரு சண்டை வரும். “போன தடவ நீதானே உட்கார்ந்த.. இந்த தடவை நான் தான் உட்காரனும்”.. “இல்ல முடியாது நான்தான் உட்காருவேன்” அப்படின்னு வர சண்டை எல்லாம் மறக்கவே மறக்காது. இன்றளவும் அந்த சண்டைகள் விளையாட்டாக நடப்பதுண்டு. கடற்கரை மணலிலும், அலையிலும் விளையாடுவது சலிக்கவே சலிக்காது. ஆனால் வீடு திரும்பும் போது தான், ஈரமும், மணலுமாயிருக்கும் உடையை எப்போதடா குளித்து விட்டு மாற்றுவோம் என்றிருக்கும்.
ஊரிலிருந்து அப்பாக்கள், அம்மாக்களும் வந்துவிட்டால் அனைவரும் சேர்ந்து மாடியில் படுத்து தூங்குவோம். எங்கிருந்தாலும், மாடியில், வீட்டின் முன் வாசல், பின் வாசலில், கட்டிலிலோ, கட்டாந்தரையில் பாய் விரித்தோ, வானத்தைப் பார்த்துக்கொண்டே அனைவருடனும் (பிள்ளைகள், பெரியவர்கள்) பேசி சிரித்துக் கொண்டு, படுத்துறங்குவதின் ஆனந்தமே அலாதிதான். மாடியில் படுத்திருக்கும் போது, அருகிலுள்ள மாணிக்கம் தியேட்டரிலிருந்து, சந்தடி எல்லாம் அடங்கிய பின் இரவு இரண்டாம் காட்சியின் சத்தம் கேட்கும். அதைக் கேட்டு “இது கேக்குதா அது கேக்குதா” அப்படின்னு பேசி சிரிச்சுக்கிட்டே தூங்கினதெல்லாம் சந்தோஷ நினைவுகள்.
அப்பா அம்மா லாம் ஊர்ல இருந்து வந்திருந்த ஒரு நாள், மாடியில் அனைவரும் படுத்து விட்டோம். தியேட்டரில் இருந்து இரண்டாம் காட்சிக்கான சத்தம் கேட்டதும் சட்டென்று யாரோ கேட்டார்கள் “சினிமாவிற்கு போகலாமா” என்று. நாங்க சின்ன பிள்ளைங்க எல்லாம் “போலாம் போலாம்” னு சொன்ன உடனே அப்பாவும் சரி என்று சொல்லி, அனைவரும் உடனே கிளம்பிச் சென்று பார்த்த படம் தான் “புது வசந்தம்”. படத்தில் சித்தாரா அட்ரஸ் கேட்கும்போதே போய்ட்டோம்.
தரமான படங்களை இயக்கிய தலைசிறந்த இயக்குனர் விகரமனின் படம் அது. அப்போது வந்த திரைப்படங்களில் மிக மிகத் தரமான, வித்தியாசமான, ஆண் பெண் நட்பை தைரியமாக நல்ல முறையில் சொன்ன, ஒரு மிக நல்லத் திரைப்படம். இப்போதும் அந்த திரைப்படத்தை தொலைக்காட்சியில் பார்க்க நேரும் பொழுது எங்கள் அனைவருக்கும் இந்த நிகழ்வும் மாணிக்கம் தியேட்டரும் தான் ஞாபகத்திற்கு வரும். இப்படி பல நல்ல நிகழ்வுகள், அதன் அழியா நினைவுகள் தந்த மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!