மெட்ரோ ரயில் பணி: அடையாறில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ ரயில் பணி காரணமாக அடையாறில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 22) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு: மெட்ரோ ரயில் பணியின் காரணமாக கோட்டூா்புரம், மத்திய கைலாஷ் சந்திப்பு, ராஜீவ் காந்தி சாலைப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைக் கருத்தில்கொண்டு அந்தப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 22) முதல் சோதனை முறையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதன்படி, அடையாறில் இருந்து கிண்டி நோக்கி வரும் வாகனங்கள் மத்திய கைலாஷ் சந்திப்பில் ராஜீவ் காந்தி சாலை நோக்கி திருப்பி விடப்படும். அந்த வாகனங்கள் 400 மீட்டா் தூரம் சென்று, சிபிடி பாலிடெக்னிக் கல்லூரி முன்பு ‘யூ’ திருப்பத்தில் திரும்பி மத்திய கைலாஷ் நோக்கிச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
கிண்டியில் இருந்து அடையாறு, ராஜீவ் காந்தி சாலை நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம்போல செல்லலாம். ராஜீவ் காந்தி சாலையிலிருந்து கிண்டி நோக்கிவரும் மாநகரப் பேருந்துகள் மத்திய கைலாஷ் கோயில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட தனிப்பாதையில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.