மே 15 முதல் மீண்டும் தொடங்கும் IPL? - வெளிநாட்டு வீரர்களை திரும்ப அழைக்கும் முயற்சியில் அணிகள்!
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே மே 8-ம் தேதி இரவு மோதல் தீவிரமடைந்ததையடுத்து, அன்றிரவு நடைபெற்ற பஞ்சாப் vs டெல்லி ஐ.பி.எல் போட்டி பாதுகாப்பு காரணங்களால் பாதியில் நிறுத்தப்பட்டது.
அதோடு, ஐ.பி.எல் தொடரும் தற்காலிகமாக வார காலத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் மோதல் எப்போதும் முடிவுக்கு வரும் என்று தெரியாததால் அனைத்து அணிகளும் தங்களின் வெளிநாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை அவர்களது நாட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

இவ்வாறான சூழலில், இருநாடுகளுக்கிடையிலான மோதலை நிறுத்த ஒப்பந்தம் முடிவாகியிருப்பதாகவும், மாலை 5 மணி முதல் அது நடைமுறைக்கு வருவதாகவும் நேற்று (மே 10) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஐ.பி.எல் தொடரை உடனடியாக மீண்டும் நடத்தும் முயற்சியில் ஐ.பி.எல் இறங்கியது.

இது குறித்து, ஐ.பி.எல் சேர்மன் அருண் துமல், “மோதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பதால், ஐ.பி.எல் தொடரை மீண்டும் நடத்துவது குறித்து ஆலோசிக்கிறோம்.
தொடரை உடனடியாகத் தொடங்க முடிந்தால் போட்டி நடைபெறும் இடங்கள், தேதி உள்ளிட்டவற்றைத் திட்டமிட வேண்டும்.
அணியின் உரிமையாளர்கள் மற்றும் ஒன்றிய அரசிடம் இது குறித்து கலந்தாலோசிக்க வேண்டும்." என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், அவரவர் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்ட வெளிநாட்டு வீரர்களைத் திரும்ப அழைக்கும் முயற்சியில் ஐ.பி.எல் அணிகளின் நிர்வாகமும், பி.சி.சி.ஐ-யும் ஈடுபடத்தொடங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
இன்னும் 12 லீக் போட்டிகள் மற்றும் 4 பிளேஆஃப் போட்டிகள் மட்டுமே மிச்சமிருக்கும் நிலையில், அரசிடம் உடனடியாக அனுமதி பெற்று மே 15-ம் தேதி முதல் ஐ.பி.எல் மீண்டும் தொடங்கலாம் என்று கூறப்படுகிறது.

அதேசமயம், இந்தியா - பாகிஸ்தான் மோதலால் முதலில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் vs டெல்லி போட்டியிலிருந்து ஐ.பி.எல் தொடங்குமா அல்லது அதற்கடுத்த போட்டியிலிருந்து ஐ.பி.எல் தொடங்குமா என்பது விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் தெரியவரும்.