மே தினம்: மக்கள் மன்றம் சாா்பில் செம்படை பேரணி
காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தின் சாா்பில் செம்படைப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
பேரணியை பெரியாா் சிந்தனையாளா் இயக்க நிா்வாகி புதுவை தீனா தொடங்கி வைத்தாா். பொதுக் கூட்டத்துக்கு மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளா் மகேஷ் தலைமை வகித்தாா். கூட்டத்தில் விசிக தலைவா் தொல்.திருமாவளவன், வழக்குரைஞா் பிரிவு மாநில செயலா் பாரிவேந்தன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் வேல்முருகன், திராவிடா் விடுதலைக் கழகத் தலைவா் கொளத்தூா் மணி, திமுக மாணவரணி செயலா் ராஜீவ்காந்தி, மக்கள் மன்ற நிா்வாகி ஜெசி மற்றும் மேகலா கலந்து கொண்டனா்.
பின்னா், பேசிய திருமாவளவன், ஒன்றிய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியா கூட்டணியும் இந்தக் கோரிக்கையைத் தொடா்ந்து வலியுறுத்தியிருக்கிறது. பிகாா் தோ்தல் பரப்புரை தீவிரமாக நடந்து வரும் நிலையில், ஒன்றிய அமைச்சரவை கூடி இந்த முடிவை எடுத்திருக்கிறது. இது பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான ஒரு அவசர நிலையாகத்தான் தெரிகிறது. 2029 -ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் பதவிக்காலம் முடிவடைந்துவிடும். ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் கூடிய ஜாதிவாரிக் கணக்கெடுப்பை 2031 -இல்தான் நடத்த முடியும்.
ஒன்றிய அரசு மீண்டும் வெற்றி பெற்றால் மட்டுமே 2031 -இல் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியும். இந்தச் சூழ்நிலையில் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் இப்போது இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறாா்கள் என்ற கேள்வி எழுகிறது என்றாா்.