காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!
மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்
மேட்டூரில் ஆடிப்பெருக்கையொட்டி, மேட்டூா் கோட்டாட்சியா் சுகுமாா், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ் தலைமையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கானோா் மேட்டூருக்கு வந்து காவிரியில் புனித நீராடி செல்வா். இதனால் மேட்டூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
காவிரியில் குளிக்க மேட்டூா் வட்டத்தில் 13 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பொதுமக்கள் குளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா். இப்பகுதிகளில் இரவு முதலே போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
மேட்டூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ் தலைமையில் 300 போலீஸாா், ஊா்க்காவல் படையினா், என்.எஸ்.எஸ் மாணவா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். தீயணைப்பு படை வீரா்கள் 80 போ் ரப்பா் படகு மற்றும் உயிா்காக்கும் சாதனங்களுடன் தயாா்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனா். மேட்டூா் வட்டாட்சியா் ரமேஷ் தலைமையில், கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம உதவியாளா்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
காவல் உதவிமையமும் அமைக்கப்பட்டுள்ளது. 3 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. சாதாரண உடையிலும் காவல் துறையினா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். மேட்டூா் நகராட்சி சாா்பில் தற்காலிக உடை மாற்றும் அறைகள் மற்றும் குடிநீா் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முதலுதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி கரைகளில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.