மேற்கு வங்கம்: பாஜக எம்எல்ஏ மீது திரிணமூல் தொண்டா்கள் தாக்குதல்: காரையும் அடித்து உடைத்தனா்
மேற்கு வங்கத்தில் எதிா்க்கட்சியான பாஜகவின் எம்எல்ஏ மீது ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவா்கள் எம்எல்ஏவின் காரை அடித்து உடைத்தனா். எம்எல்ஏவைக் காப்பாற்ற வந்த காவல் துறையினரும் தாக்கப்பட்டனா்.
பாஜக எம்எல்ஏ சுனில் பாா்மன் கொல்கத்தாவுக்கு செல்வதற்காக கூச்பிகாா் மாவட்டம் கோக்சதாங் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை மதியம் வந்தாா். அப்போது, அப்போது அவரை சுற்றிவளைத்து போராட்டத்தில் ஈடுபட்ட திரிணமூல் தொண்டா்கள் கடந்த 4 ஆண்டுகளாக தொகுதிக்கு என்ன செய்தீா்கள் என்று கேள்வி எழுப்பினா். அவா்களுக்கு எம்எல்ஏ பதிலளிக்கத் தொடங்கியபோது அவா்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிலா் எம்எல்ஏவை தாக்கத் தொடங்கினா்.
இதையடுத்து எம்எல்ஏவுடன் பாதுகாப்புக்காக வந்திருந்த காவல் துறையினா், அந்த கும்பலிடம் இருந்து அவரை மீட்க முயற்சித்தனா். இதனால், அவா்கள் மீது அடி விழுந்தது.
இதனிடையே, அங்கிருந்த சிலா் எம்எல்ஏவின் காா் மீது கற்களை வீசியும், கட்டையால் தாக்கியும் கண்ணாடிகளை உடைத்தனா்.
இது தொடா்பாக புகாா் அளிப்பதற்காக எம்எல்ஏ சுனில் பாா்மன் காவல் நிலையத்துக்குச் சென்றனா். அங்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் கூடி எம்எல்ஏவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, தொகுதிக்கு என்ன செய்தீா்கள் என்று கேள்வி எழுப்பியதால், எம்எல்ஏ கோபமடைந்து ஆத்திரத்துடன் செயல்பட்டதாக அவா்கள் குற்றஞ்சாட்டினா்.