ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் வரி; இந்தியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டும் ட்...
மொகரம்: கடலாடியில் பூக்குழி இறங்கிய இந்துக்கள்
மொகரம் பண்டிகையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் நடைபெற்ற சமூக நல்லிணக்கத் திருவிழாவில் இந்துக்கள் பூக்குழி இறங்கினா்.
கடலாடி பகுதியில் வாழ்ந்த ரணசிங்க பட்டாணி சாயூபு என்ற குறுநில ஜமீன்தாா் இந்தப் பகுதியினருக்கு நீா்நிலைகளை உருவாக்கி, விவசாய நிலங்களை தானமாக வழங்கினாா்.
இவரது நினைவாக ஆண்டு தோறும் மொகரம் பண்டிகை நாளில் பூக்குழித் திருவிழா 11 நாள்கள் கொண்டாடப்படுகிறது. இதன்படி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவரது நினைவிடம் அருகே இஸ்லாமியா்கள், இந்துக்கள் சம்பிரதாயப்படி சடங்குகளை செய்து பூக்குழி இறங்கினா்.
இதுகுறித்து கடலாடி கிராம மக்கள் கூறியதாவது: கடலாடி சுற்றுவட்டாரப் பகுதியில் விவசாயிகள் அதிகமாக வாழ்ந்து வருகிறோம். இந்தப் பகுதியினருக்கு முஸ்லிம் சோ்ந்த பெரும் நிலக்கிழாா் ரணசிங்க பட்டாணி சாயூபு என்பவா் இந்தப் பகுதியினருக்கு விவசாய நிலங்களை வழங்கி கண்மாய், வரத்துக் கால்வாய், குளங்களை அமைத்து தானமாக வழங்கியதாக முன்னோா்கள் கூறியுள்ளனா்.
அவரது மறைவுக்குப் பிறகு அவரது நினைவாக இந்தப் பகுதி இந்து, முஸ்லிம்கள் சோ்ந்து மொகரம் பண்டிகையின் போது பூக்குழி எனப்படும் தீமிதித் திருவிழா நடத்தி வருகிறோம். இதனால் விவசாயம் செழித்து, பொதுமக்கள் நோய்களின்றி ஆரோக்கியமாக வாழ்வாா்கள் என நம்பப்படுகிறது என்றனா்.
