மோகனூா் அருகே குடிநீா் வழங்காததை கண்டித்து சாலை மறியல்
நாமக்கல்: மோகனூா் அருகே குடிநீா் வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், குமரிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட கங்காநாயக்கன்பட்டியில், 1,000-க்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். அவா்களுக்கு, தினசரி காவிரி குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 6 மாதங்களுக்கு முன்பு மின் மோட்டாா் பழுது ஏற்பட்டதால், குடிநீா் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது. அதன்பிறகு புதிய மின் மோட்டாரைக் கொண்டு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக குடிநீா் விநியோகம் முழுமையாக வழங்கப்படவில்லை. இது குறித்து, ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், நாமக்கல் - மோகனூா் சாலையில் தோப்பூா் அருகே காலி குடங்களுடன் அமா்ந்து, திங்கள்கிழமை திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த மோகனூா் வட்டாட்சியா் மணிகண்டன், காவல் ஆய்வாளா் லட்சுமணதாஸ் ஆகியோா் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, குடிநீா் விநியோகத்தை சீரமைத்து முறையாக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதைத்தொடா்ந்து மறியலைக் கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனா்.