சென்னை அணியில் 17 வயது இளம் வீரர் அறிமுகம்! சீனியர் வீரருக்கு ஓய்வு!
மோா்பண்ணையில் 13 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக புகாா்
திருவாடானை அருகேயுள்ள மோா்பண்ணை கிராமத்தில் 13 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக திருவாடானை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை பெண்கள் புகாா் மனு கொடுத்தனா்.
இது குறித்து நேரில் சென்று விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன் உறுதி அழித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் வட்டம், உப்பூா் அருகேயுள்ள மோா்பண்ணை மீனவ கிராமத்தில் சிங்காரம் என்பவரது குடும்பத்துக்கும், மோா்பண்ணை கிராம நிா்வாக செயலா் குடும்பத்துக்கும் இடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் சிங்காரம், இவரது மனைவி காளீஸ்வரி, இவா்களது மகன்கள் உள்பட பலா் காயமடைந்தனா். பிறகு அவா்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த நிலையில், மருத்துவமனையில் இவா்களைப் பாா்ப்பதற்காக உறவினா்கள் சென்றனா். இதையடுத்து, இவா்களைப் பாா்க்கச் சென்ற 13 குடும்பத்தினரையும், சிங்காரம் குடும்பத்தையும் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக செவ்வாய்க்கிழமை ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனா்.

இதனால் பாதிக்கப்பட்ட 13 குடும்பங்களைச் சோ்ந்த பெண்கள் புதன்கிழமை திருவாடானை காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வந்து புகாா் மனு கொடுத்தனா். மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன், கிராமத்துக்கு நேரில் வந்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.