Car: '35 ஆண்டுகள், 100 ஆடம்பர கார்கள்' - ரூ.8500 கோடி மதிப்புள்ள வீட்டை கார் மிய...
ரணில் விக்ரமசிங்க கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: மகிந்த ராஜபக்ச
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளது அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதுடன் ஆக. 26 வரை அவருக்கு நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து உடல்நலக்குறைவு காரணமாக ரணில் விக்ரமசிங்க இன்று(சனிக்கிழமை) சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ரணில் விக்ரமசிங்கவை சிறைச்சாலை மருத்துவமனையில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேசினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"அரசியலில் இருப்பவர்கள் வழக்குகளை எதிர்கொள்வது சாதாரணமானதுதான். ரணில் அதனை எதிர்கொள்வார். அவர் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதெல்லாம் அரசியலின் ஒரு பகுதி. அவருக்கு எந்த உடல்நலப் பிரச்னையும் இல்லை. சிறிய தவறுக்காக அவர் சிறையில் இருப்பதற்கு வருத்தம் அளிக்கிறது.
இதுபோன்ற நடவடிக்கைகள் பழிவாங்கும் செயல்களைத் தவிர வேறில்லை. மக்கள் அரசின் நடவடிக்கைகளை சரியாகப் புரிந்துகொண்டுள்ளனர். மக்கள் அரசியல் தலைவர்களை ஆதரிக்கின்றனர். நாங்கள் மக்களை நேசிக்கிறோம். அதனால்தான் மக்களும் எங்களை நேசிக்கிறார்கள்" என்று பேசினார்.
அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரா உள்ளிட்ட பலரும் விக்ரமசிங்கவைச் சிறைச்சாலை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

ரணில் விக்ரமசிங்க கைது
ரணில் விக்ரமசிங்க இலங்கை அதிபராக இருந்தபோது 2023 செப்டம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் லண்டன் பல்கலைக்கழகத்திற்கு தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள சென்றுள்ளார். இதற்காக இலங்கை அரசின் நிதியில் இருந்து ரூ. 1.7 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது. அரசு நிதியில் லண்டன் சென்ற ரணில் விக்ரமசிங்க உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரணில் விக்ரமசிங்கவுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் கொழும்புவில் சிஐடி(CID) அதிகாரிகள் முன்பு நேற்று(ஆக. 22) ஆஜராக, அவரிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதையடுத்து உடனடியாக ரணில் விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இலங்கை முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ரணில் விக்ரமசிங்க நீதிமன்றத்தின் முப்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு ஆக. 26 வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இலங்கையின் மிகப்பெரிய சிறைச்சாலையான வெலிக்கடை சிறைச்சாலையில் ரணில் விக்ரமசிங்க அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக நீதிமன்றத்தில் இருந்து போலீசார் அவரை கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர்.