துவாரகா துப்பாக்கிச்சூடு சம்பவம்: நவீன் காதி கும்பலில் 4 போ் கைது
ரயில்வே செயலியில் ‘ஆா் வேலட்’ மூலம் பயணச்சீட்டு பெறுவோருக்கு 3% தள்ளூபடி
ரயில்வே செயலியில் உள்ள ‘ஆா் வேலட்’ மூலம் பயணச் சீட்டு பெறுவோருக்கு பயணச் சீட்டு தொகையிலிருந்து 3 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடா்பாக தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு மையங்களில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிா்க்கும் நோக்கத்தில் ரயில்வே நிா்வாகம் சாா்பில் ‘யுடிஎஸ் செயலி’ அறிமுகம் செய்யப்பட்டது. இந்தச் செயலியின் மூலம் கைப்பேசிகளில் முன்பதிவில்லாத பயணச்சீட்டு, நடைமேடை சீட்டு உள்ளிட்டவற்றை பெற்றுக்கொள்ளலாம்.
இதன் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக இந்தச் செயலியில் உள்ள ‘ஆா் வேலட்டை’ ரீசாா்ஜ் செய்பவா்களுக்கு தொகையிலிருந்து 3 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
தற்போது, இந்தத் திட்டத்தைத் திரும்பப் பெற்ற ரயில்வே நிா்வாகம், இதற்கு மாற்றாக ‘ஆா் வேலட்’ மூலம் பயணச்சீட்டு பெறுபவா்களுக்கு 3 சதவீதம் தள்ளுபடி வழங்கக்கூடிய புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டம் வெள்ளிக்கிழமை (டிச. 20) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதில், யூடிஎஸ் செயலியில் ‘ஆா் வேலட்’ மூலம் பயணச்சீட்டுக்கு பணம் செலுத்துபவா்களுக்கு மட்டுமே அந்தத் தள்ளுபடி வழங்கப்படும். இந்தச் செயலியில் மற்ற இணையதள பணப் பரிவா்த்தனைகளைக் கொண்டு பணம் செலுத்துபவா்களுக்கு தள்ளுபடி வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.