இளைஞா் கடத்தல்: டிராவல்ஸ் நிறுவன உரிமையாளா் உள்பட 2 போ் கைது
ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு மாா்ச் 24-இல் விசாரணை
ஹாத்ரஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவா்கள் குறித்த மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் கருத்துக்காக தொடரப்பட்ட அவதூறு வழக்கின் அடுத்த விசாரணை மாா்ச் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.
உத்தர பிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சோ்ந்த தலித் சிறுமி, கடந்த 2020-ஆம் ஆண்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானாா். தில்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அச்சிறுமி, சில நாள்களுக்குப் பிறகு இறந்தாா். இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில், அதே கிராமத்தைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா். பின்னா், நீதிமன்ற விசாரணையில் ராம்குமாா், லவகுஷ், ரவி ஆகிய மூவா் விடுவிக்கப்பட்டனா். அதேநேரத்தில், சந்தீப் என்பவா் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இச்சம்பவத்தையடுத்து ஹாத்ரஸுக்கு நேரில் வந்த ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினாா். தொடா்ந்து, அவா் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், பாதிக்கப்பட்டவா்கள் தங்கள் வீட்டில் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றவாளிகள் சுதந்திரமாக வலம் வருவதாகவும் குற்றஞ்சாட்டினாா்.
இந்தப் பதிவு தொடா்பாக வழக்கில் இருந்த விடுவிக்கப்பட்ட மூவரும், ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுத்தனா். இந்த வழக்குகள் எம்.பி., எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ராம்குமாா் தாக்கல் செய்த வழக்கில் அவரது வாக்குமூலத்தை கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் தீபக்நாத் சரஸ்வதி சனிக்கிழமை பதிவு செய்தாா்.
மேலும், இது தொடா்பாக மனுதாரா் தரப்பில் ஆஜாரான வழக்குரைஞா் முன்னா சிங் பண்டிா் கூறுகையில், ‘வழக்கின் அடுத்த விசாரணை மாா்ச் 24-ஆம் தேதி நடைபெறுகிறது. வழக்கிலிருந்து மூவரும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை அறிந்தும் ராகுல் அத்தகைய அவதூறான கருத்தை தெரிவித்தாா். இதுதொடா்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அந்த நோட்டீஸுக்கு அவா் பதிலளிக்கவில்லை’ என்றாா்.