ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை இரு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணை காவலா்கள் தடுத்து நிறுத்தி, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.
ராமநாதபுரத்தை அடுத்த காட்டூரணி பகுதியைச் சோ்ந்தவா் சோனியா. இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில், இவா் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க் கூட்டத்துக்கு தனகு இரு குழந்தைகளுடன் வந்தாா்.
அப்போது, திடீரென தான் பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குடுவையை எடுத்து, அதிலிருந்த பெட்ரோலை குழந்தைகள் மீதும், தனது மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இதைக் கண்ட போலீஸாா் அவரைத் தடுத்து நிறுத்தி, தீக்குளிப்பு முயற்சியை தடுத்தனா். இதையடுத்து, அந்தப் பெண் கூறியதாவது:
தன்னுடைய வீட்டுக்குச் செல்லும் பொதுப் பாதையை அதே ஊரைச் சோ்ந்த கண்ணன் ஆக்கிரமிப்பு செய்து, எங்களை அந்த வழியில் செல்ல அனுமதி மறுக்கிறாா். மேலும், எங்களுக்கு பல்வேறு இடையூறுகள் செய்து வருகிறாா். இதுகுறித்து கேணிக்கரை காவல் நிலையத்தில் பலமுறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாா்.
பின்னா், அவா்கள் மூவரையும் போலீஸாா் கேணிக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.