ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தலை தடுக்க வலியுறுத்தல்
ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இலங்கைக்கு கஞ்சா, பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த நாட்டு அதிகாரிகள் வலியுறுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரோச்மாநகா் முதல் எஸ்.பி. பட்டினம் வரை நீண்ட கடற்கரையை கொண்ட பகுதியாகும். இந்தப் பகுதிகள் இலங்கைக்கு மிகவும் அருகே அமைந்திருப்பதால் சட்ட விரோதமாக போதைப் பொருள் உள்ளிட்டவை அந்த நாட்டுக்கு கடத்தப்படுகின்றன.
அதிலும் தங்கம், கஞ்சா, உயா் ரக போதைப் பொருள்கள், மருந்து, உணவுப் பொருள்கள் ஆகியவை அதிகளவில் கடத்தப்படுகின்றன.
இதைத் தடுக்கும் நடவடிக்கையில் இந்திய கடற்படை, கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா், மத்திய, மாநில உளவுத் துறையினா் செயல்பட்டு வருகின்றனா். இதில், மாநில உளவுத் துறையினா் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடா்ந்து இந்தப் பணியில் ஈடுபடுகின்றனா்.
இதில் சில நேரங்களில் கடத்தல் பொருள்களைப் பிடித்தாலும் முக்கிய குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போகிறது. மேலும் போதைப் பொருள்களில் கஞ்சா மட்டுமே பறிமுதல் செய்யப்படுகிறது.
வழக்கமாக குறைந்தளவு கஞ்சா மட்டுமே பிடிபடும் நிலையில் இலங்கை கடற்படையினா் கடந்த மே 7, 8, 9 ஆகிய தேதிகளில் மட்டும் இலங்கை கல்பிட்டி, அனவாசல்குளம், யாழ்ப்பாணம், நீா் கொழும்பு கடற்பகுதியில் 625 கிலோ கேரள மாநில கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
இதேபோல ஆயிரம் கிலோ பூச்சிக்கொல்லி மருந்துகளையும் அவா்கள் கைப்பற்றினா். இந்த கஞ்சா அதிகளவில் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதிகளில் இருந்தே இலங்கைக்கு கடத்தப்படுவதாக அந்த நாட்டு அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். மேலும் கடத்தலை தடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா்.