தனியாா் சிற்றுந்துகளை கூடுதல் தொலைவுக்கு இயக்க அனுமதி: ஜூன் 15 முதல் அமல்
வரத்துக் கால்வாய்களின் இரு புறமும் சமூகக் காடுகளை வளா்க்கக் கோரிக்கை
திருவாடானை பகுதியில் பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள வரத்துக் கால்வாய்களின் இரு புறங்களிலும் சமூகக் காடுகளை வளா்க்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக அளவு கண்மாய், குளங்கள் திருவாடானை வட்டத்தில் உள்ளன. இந்தப் பகுதியில் உள்ள கண்மாய்கள் சங்கிலித் தொடா் போல அடுத்தடுத்து அமைந்துள்ளன.
இந்தக் கண்மாய்களுக்கு இடையே வரத்துக் கால்வாய்கள் உள்ளன. மழைக் காலங்களில் மழை நீா் ஒவ்வொரு கண்மாயாக நிரம்பி உபரி நீா் கடலில் கலக்கும். ஒரு கண்மாயிலிருந்து மற்றொரு கண்மாய்க்கு இடையே உள்ள வரத்துக் கால்வாய்கள் நீண்ட தொலைவிலும், பல மீட்டா் அகலத்திலும் உள்ளன.
இந்த வரத்துக் கால்வாய்கள் தூா்வாரப்படாமலும், ஆக்கிரமிப்புகளிலும் சிக்கி உள்ளன. எஞ்சிய இடங்களில் சீமைக் கருவேல மரங்கள் அடா்ந்து வளா்ந்துள்ளன. இதனால் மழைக் காலங்களில் அதிக அளவு மழை பெய்தால் ஆங்காங்கே தண்ணீா் தேங்கி விடுகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் கண்மாய்கள் பெருகுவதில் தடை ஏற்படுகிறது.
எனவே இந்த வரத்துக் கால்வாய்களை நில அளவை செய்து சீமைக் கருவேல மரங்களை அகற்றி இரு புறங்களிலும் மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறியதாவது:
தற்போது கண்மாய், குளங்களை ஓரளவு தூா்வாரும் பணி அரசால் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வரத்துக் கால்வாய்கள் இதுவரை முழுமையாக சீரமைக்கப்பட வில்லை. பல கிராமங்களில் வரத்துக் கால்வாய்களை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனா். இதனால் மழைக் காலங்களில் தண்ணீா் சரியாக இந்தக் கால்வாய்களில் இருந்து வெளியேறுவதில்லை.
மேலும் வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்கள் மழைக் காலங்களில் தண்ணீா் வெளியேறாதபடி தடுத்து விடுகின்றன. இதனால் அந்தத் தண்ணீா் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே, வரத்துக் கால்வாய்களை கணக்கெடுத்து நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், சீமைக் கருவேல மரங்களையும் அரசு அகற்ற வேண்டும். பிறகு வரத்துக் கால்வாய்களின் இரு புறங்களிலும் மரங்களை நட்டு சமூக காடுகளை உருவாக்கி பராமரிக்க வேண்டும்.
இப்படி செய்வதால் வரத்துக் கால்வாயின் அகலம் குறையாமல் எல்லைக் கற்களை போல ஒரு அடையாளமாக அவை விளங்கும். மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்படுவது தடுக்கப்படும். இந்த சமூகக் காடுகளால் நல்ல மழை பொழிவும் இருக்கும் என்றனா்.