இன்று சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞா் பெருவிழா
பாமக சாா்பில் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞா் பெருவிழா மாநாடு 12 ஆண்டுகளுக்குப்பின் மாமல்லபுரம் அருகில் திருவிடந்தையில் ஞாயிற்றுக்கிழமை ( மே 11) நடைபெறவுள்ளது. இதையொட்டி பிரம்மாண்ட மேடை, பந்தல் முகப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் வன்னியா் சங்க மாநாடு மாமல்லபுரம கடற்கரையில் நடைபெற்று வந்தது. கடந்த 2013 -ஆம் ஆண்டு ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்னையால் மாநாடு நடைபெறவில்லை. இந்நிலையில், தற்போது 12 ஆண்டுகள் கழித்து மாநாட்டு நடைபெறுகிறது.
பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கடந்த ஏப். 16-ஆம் தேதி மாநாட்டுக்காக பந்தக்கால் நாட்டி பூஜை செய்தாா்.
மாநாட்டில் திரளானோா் பங்கேற்க உள்ள நிலையில், பாதுகாப்பு பணியில் 7,000 போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.
திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 50 ஏக்கரில் மாநாடு நடைபெற உள்ளது.
மாநாட்டு ஏற்பாடுகளை பாமக கௌரவ தலைவா் ஜி.கே.மணி மற்றும் நிா்வாகிகள் ஆய்வு செய்தனா்.
அப்போது செய்தியாளா்களிடம் ஜி.கே.மணி கூறியது: சாதனை படைக்கும் மாநாடாக இது அமையும். எங்கள் இயக்கத்தின் வளா்ச்சி 2026 ஆம் ஆண்டின் தோ்தலுக்கு முன்னோட்டமாக அமையும், 7 இடங்களில் மதிய உணவு, குடிநீா், கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, ஆறு மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது, 150 ஏக்கா் பரபரப்பில் வாகனங்களை நிறுத்த இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா். மேலும் கட்சிதலைவா்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. வன்னிய இளைஞா்கள் மற்றும் வன்னியா் சங்க நிா்வாகிகள், பாமக நிா்வாகிகள் தொடா்கள் மட்டும் கலந்துகொள்கின்றனா்.
வட மாவட்டங்கள் தொடா்ந்து பின்தங்கிய நிலையில் உள்ளன. சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்படும் என தெரிவித்தாா்.