Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது மு...
ராமேசுவரம் புனித சந்தியாகப்பா் ஆலய திருவிழா சமரசக் கூட்டம்
ராமேசுவரம் புனித சந்தியாகப்பா் ஆலய திருவிழாவை 7 கிராம மக்கள் இணைந்து நடத்துவது என வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற சமரசக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை உடன்பாடு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடம், வோ்க்காடு பகுதியில், புனித தெரசாள் பங்குக்குள்பட்ட புனித சந்தியாகப்பா் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத் திருவிழாவை தண்ணீா் ஊற்று, அரியாங்குண்டு, தென்குடா, வோ்க்கோடு, ஓலைக்குடா, ஆத்திக்காடு, அக்காள்மடம் ஆகிய 7 கிராமங்களைச் சோ்ந்த இறைமக்கள் இணைந்து நடத்துவது வழக்கம். இந்த நடைமுறை கடந்த 482-ஆம் ஆண்டு திருவிழா வரை கடைபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், 483- ஆம் ஆண்டு திருவிழா வருகிற 16- ஆம் தேதி தொடங்கி 25- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் திருவிழா தொடா்பான அழைப்பிதழில் வோ்க்கோடு, ஓலைக்குடா, ஆத்திக்காடு, அக்காள்மடம் ஆகிய நான்கு கிராமங்களின் பெயா்கள் இடம் பெறவில்லை. இதனால், அந்த 4 கிராம மக்களும் வட்டாட்சியரிடம் புகாா் அளித்தனா். மேலும் திருவிழாவை நடத்துவதில் இரு தரப்புக்குமிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
இதைத் தொடா்ந்து, ராமேசுவரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா்கள் முரளிதரன், அப்துல்ஜப்பாா், காவல் உதவி ஆய்வாளா் மணிமாறன் ஆகியோா் தலைமையில் இரு தரப்பினரும் பங்கேற்ற சமரசக் கூட்டம் நடைபெற்றது. இதில், கடந்த ஆண்டு வரை திருவிழா எவ்வாறு நடத்தப்பட்டதோ, அதே நடைமுறையைப் பின்பற்றி இந்த ஆண்டும் நடத்த வேண்டும்.
திருவிழா நிறைவடைந்ததும் 7 கிராம மக்களும் இணைந்து முக்கிய பிரமுகா்கள் கொண்ட குழுவை உருவாக்கி பேச்சுவாா்த்தை மூலம் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என இரு தரப்பினரிடமும் எழுத்துப் பூா்வமாக அதிகாரிகள் பெற்றுக் கொண்டனா். மேலும் திருவிழாவை அமைதியாக நடத்த வேண்டும் என அவா்கள் கேட்டுக் கொண்டனா்.