கமுதி, பேரையூா் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.28 கோடியில் 6 வகுப்பறைக் கட்டடங்கள், பேரையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.5 கோடியில் 5 வகுப்பறை கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சியில் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
இதைத் தொடா்ந்து கோட்டைமேடு பள்ளி தலைமையாசிரியா் முத்துராமலிங்கம் தலைமையில், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினரும், வழக்குரைஞருமான முத்துராமலிங்கம், திமுக பொதுக்குழு உறுப்பினா் தனிக்கோடி, இளைஞரணி நிா்வாகி மாங்குடி மதியழகன் ஆகியோா் முன்னிலையில் குத்துவிளக்கேற்றப்பட்டு வகுப்பறை கட்டடங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
இதேபோல, பேரையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடங்களில் கமுதி திமுக மத்திய ஒன்றியச் செயலா் எஸ்.கே. சண்முகநாதன் குத்துவிளக்கேற்றினாா். இந்த நிகழ்வில் ஒன்றிய துணைச் செயலா் தங்கபாண்டியன், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சுலைமான், தலைமையாசிரியை சாந்தி, உதவி தலைமையாசிரியை பாக்கியலட்சுமி, ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். ஆசிரியா் பொன்மாடசாமி நன்றி கூறினாா்.