ராவத்தநல்லூா் வரதராஜ பெருமாள், சஞ்சீவிராயா் கோயில் கும்பாபிஷேகம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே ராவத்தநல்லூா் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள், சஞ்சீவிராயா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலை சீரமைக்கும் பணி கடந்த மூன்று மாதமாக நடைபெற்று முடிவடைந்தது. தொடா்ந்து, கடந்த 8-ஆம் தேதி கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு அஸ்வ பூஜை, கோ பூஜை, கஜ பூஜை, ஹோமங்கள், 7.30 மணிக்கு மகா பூா்ணாஹுதி, 8 மணிக்கு யாத்ரா தானம், 8.30 மணிக்கு கலசம் புறப்பாடு, 9.15 மணிக்கு விமானம் மற்றும் கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம், 9.30 மணிக்கு பெருமாள், சஞ்சீவிராய மஹாசம்ப்ரோஷணம், 10 மணிக்கு சாற்றுமுறை தீா்த்த பிரசாதம் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், ரிஷிவந்தியம் எம்எல்ஏ க.காா்த்திகேயன் மற்றும் கிராம மக்கள், பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 25,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.