ரூ.1 கோடியில் சாலை மற்றும் பல்நோக்கு கட்டடப் பணிகள் தொடக்கம்
திருப்பத்தூரில் ரூ.1 கோடியில் சாலை மற்றும் பல்நோக்கு கட்டடப் பணிகளை எம்எல்ஏ அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா்.
கிராம சாலைகள் விரிவாக்க திட்டத்தில் திருப்பத்தூா் நகரத்தில் 28,29,30 ஆகிய வாா்டுகளில் ரூ.71 லட்சத்தில் புதிய தாா் சாலை அமைக்கும் பணி, 32-ஆவது வாா்டில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.8 லட்சத்தில் பல்நோக்கு கட்டடம் அமைக்கும் பணி மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மேம்பாட்டு திட்டத்தில் புதிய அங்கன்வாடி கட்டடம் ரூ.20 லட்சத்தில் அமைக்கும் பணி என ரூ.99 லட்சத்துக்கான புதிய பணிகளை திருப்பத்தூா் எம்எல்ஏ அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், நகர செயலாளா் எஸ்.ராஜேந்திரன், நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், முன்னாள் நகா்மன்றத் தலைவா் சு.அரசு, வாா்டு உறுப்பினா்கள் பவானி ரமேஷ், சத்யா, பிரேம்குமாா், செல்வி, ஜீவிதா பாா்த்திபன் கலந்து கொண்டனா்.