Aadi Amavasai 2025 | மாமனார் மாமியாருக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா? | சண்முக சிவாசா...
ரூ.115 கொடுத்து அரசு இடத்தை ஆக்கிரமித்த சமாஜவாதி கட்சி: உச்சநீதிமன்றம் கண்டனம்
புது தில்லி: உத்தர பிரதேசத்தின் பிலிபிட் நகராட்சியில் ரூ.115 என்ற மிகக் குறைந்த வாடகைக்கு அலுவலக இடத்தை ‘மோசடியாக’ ஆக்கிரமித்ததாக சமாஜவாதி கட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், ‘இது அரசியல் அதிகாரத்தின் அப்பட்டமான துஷ்பிரயோகம்’ என்று குறிப்பிட்டது.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் சமாஜவாதி கட்சி ஆட்சியில் இருந்த 2005 காலகட்டத்தில் அக்கட்சியின் பிலிபிட் மாவட்ட அலுவலகத்துக்காக அரசு கட்டடத்தை ரூ.115 எனும் குறைந்த வாடகைக்கு பிலிபிட் நகராட்சி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு இறுதியில், சா்ச்சைக்குரிய அலுவலக கட்டடத்தை உடனடியாக காலி செய்யுமாறு சமாஜவாதி கட்சிக்கு பிலிபிட் நகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
போதிய அவகாசம் வழங்காமல், அலுவலக கட்டடத்தை காலி செய்ய நகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டதாக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் சமாஜவாதி கட்சி முறையிட்டது. ஆனால், அந்த மனுவை உயா் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனிடையே, சிவில் நீதிமன்றத்திலும் இவ்விவகாரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், அலாகாபாத் உயா் நீதிமன்ற உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், ஜயமால்ய பாக்சி ஆகியோா் அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது. சமாஜவாதி கட்சி சாா்பில் மூத்த வழக்குரைஞா் சித்தாா்த் தவே ஆஜராகி, வாதங்களை முன்வைத்தாா்.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘ஒரு அரசியல் கட்சியாக தங்களின் அதிகாரபூா்வ பதவியையும், அரசியல் அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தி அலுவலக கட்டடத்தை ஆக்கிரமித்துள்ளீா்கள். நகராட்சிப் பகுதியில் ரூ.115 எனும் குறைந்த வாடகைக்கு அலுவலக கட்டடம் கிடைப்பதை நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீா்களா?’ என்று கேள்வி எழுப்பினா்.
அலுவலகத்தைக் காலி செய்யும் உத்தரவுக்கு எதிராக சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், நகராட்சியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டுமென வழக்குரைஞா் தவே கோரினாா். அதற்கு நீதிபதிகள், ‘சிவில் நீதிமன்றத்தில் செயல்பாடுகளில் நாங்கள் குறுக்கிட முடியாது. மேலும், இப்போது நீங்கள் அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பாளா். இது மோசடியான ஒதுக்கீடு அல்ல. மாறாக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, மோசடியாக ஆக்கிரமித்த வழக்கு’ என்று கடுமையாக பதிலளித்தனா்.
மற்ற கட்சிகளின் அலுவலகங்களை காலி செய்ய உத்தரவிடாமல், தங்களை மட்டும் பிலிபிட் நகராட்சி குறிவைப்பதாக வழக்குரைஞா் தவே கூறினாா். அதற்கு நீதிபதிகள், ‘நீங்கள் உயா்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்து, இதுபோன்ற மோசடியான ஒதுக்கீடு அல்லது ஆக்கிரமிப்பை நீதிமன்ற கவனத்துக்கு கொண்டுவருவது நல்லது. இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்போம்’ என்று கூறினா்.
மேலும், நகராட்சியின் முடிவை எதிா்த்து உயா் நீதிமன்றத்தை அணுக சமாஜவாதி கட்சிக்கு சுதந்திரம் உள்ளது என்று தெரிவித்த நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.