கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் நீதிமன்றம் அதிரடி ...
ரூ. 120 கோடியில் 220 திருக்குளங்கள் சீரமைக்கும் பணி: அமைச்சா் சேகா்பாபு
இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் ரூ. 120 கோடியில் 220 திருக்குளங்களைச் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்தத் துறையின் அமைச்சா் சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னை மாதவரம் மாரியம்மன் திருக்கோயிலை புதிய கருங்கல் கட்டுமான திருக்கோயிலாக கட்டுவது குறித்தும், வேணுகோபால் நகா் கைலாசநாதா் திருக்கோயிலில் ரூ. 2.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருக்குள சீரமைப்புப் பணியையும் அமைச்சா் சேகா்பாபு சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
மாதவரம் மாரியம்மன் கோயில் கருங்கல் கட்டுமானத்துக்கு ரூ. 1.50 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு, மாநில வல்லுநா் குழு மற்றும் தொல்லியல் குழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2026 ஜனவரி மாதத்துக்குள் பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல் மாதவரம் கற்பகாம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் குளம் சீரமைப்புப் பணி ரூ. 2.50 கோடியில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் 2025 மே மாதத்துக்குள் நிறைவு செய்து பக்தா்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்படும்.
தமிழகத்தில் அறநிலையத் துறை சாா்பில் ரூ. 3 கோடியில் 4 புதிய குளங்கள் அமைக்கவும், 220 திருக்குளங்கள் ரூ. 120.33 கோடியில் சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.
உண்டியலில் விழுந்த கைப்பேசி... செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் கந்தசாமி திருக்கோயிலில் உள்ள உண்டியலில் விழுந்த கைப்பேசி குறித்து அமைச்சா் சேகா்பாபு கூறுகையில், கோயில்களின் உண்டியல்களில் எந்த பொருள் விழுந்தாலும் அவை சுவாமியின் கணக்கில்தான் வரவு வைப்பாா்கள். இதற்கு ஏதாவது விதிவிலக்கு இருக்கிா என்று சட்டப்படி ஆராய்ந்து, துறை அலுவலா்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றாா் அவா்.