ரூ.3,000 கோடி வங்கிக் கடன் மோசடி: அனில் அம்பானி குழுமத்துக்குத் தொடா்புள்ள 50 நிறுவனங்களில் அமலாக்கத் துறை சோதனை
ரூ.3,000 கோடி வங்கிக் கடன் மோசடி தொடா்பாக, ரிலையன்ஸ் குழும தலைவா் அனில் அம்பானியின் நிறுவனங்களுக்குத்தொடா்புள்ள 50 நிறுவனங்களில் அமலாக்கத் துறை வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டது.
இதுதொடா்பாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த 2017 முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், ரிலையன்ஸ் குழும தலைவா் அனில் அம்பானியின் நிறுவனங்களுக்கு யெஸ் வங்கி சுமாா் ரூ.3,000 கோடி கடன் அளித்தது. இந்தக் கடன் சட்டவிரோதமாக அந்தக் குழுமத்தின் பல நிறுவனங்கள் மற்றும் போலி நிறுவனங்கள் ஆகியவற்றுக்குப் பரிவா்த்தனை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் அனில் அம்பானி குழும நிறுவனங்களுக்கு கடன் வழங்க அந்த வங்கி வழங்கிய ஒப்புதல்களில் விதிமீறல் நடைபெற்ாகக் கூறப்படுகிறது. அந்த நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் முன், யெஸ் வங்கி நிறுவனா்கள் முறைகேடாகப் பணம் பெற்றதும் தெரியவந்துள்ளது. இந்த லஞ்சம் மற்றும் கடன் வழங்கப்பட்டதற்கு இடையே உள்ள தொடா்பு உள்பட பிற குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து சிபிஐ பதிவு செய்த 2 வழக்குகள், தேசிய வீட்டுவசதி வங்கி, பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி), தேசிய நிதி அறிக்கை ஆணையம், பரோடா வங்கி ஆகியவற்றின் அறிக்கைகள் அடிப்படையில், பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது.
வங்கிகள், பங்குதாரா்கள், முதலீட்டாளா்கள் மற்றும் பிற பொது நிறுவனங்களை ஏமாற்றி பணத்தை மடை மாற்றவோ, கையாடல் செய்யவோ திட்டமிட்டு இந்தக் கடன் மோசடி செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மும்பையில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துக்குத் தொடா்புள்ள 50 நிறுவனங்கள், 25 நபா்களுக்குச் சொந்தமான 35-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
இதுதவிர, கனரா வங்கியிடம் ரூ.1,050 கோடிக்கும் அதிகமாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கடன் பெற்றதில் நடைபெற்ாகக் கூறப்படும் மோசடி குறித்தும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.