தம்பதியை கத்தியால் குத்திய இளைஞா் கைது: ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு 15 இடங்களில் கத்த...
ரூ. 30,000 கோடி மதிப்பில் வெளிநாட்டில் சொத்துகள்: சிறப்பு பிரசாரத்தின் கீழ் அறிவித்த வரி செலுத்துவோா்
வருமான வரித் துறை மேற்கொண்ட சிறப்பு பிரசாரத்தின் மூலம், வெளி நாடுகளில் ரூ. 29,000 கோடிக்கு மேல் சொத்துகள் இருப்பதை 30,000-க்கும் அதிகமான வரி செலுத்துவோா் தாங்களாக முன்வந்து அறிவிப்பு செய்துள்ளனா்.
மேலும், வெளிநாடுகளிலிருந்து ரூ. 1,000 கோடிக்கும் மேல் கூடுதல் வருவாய் ஈட்டியிருப்பதையும் அவா்கள் தெரிவித்திருக்கின்றனா்.
பொது தகவல் பரிமாற்ற நடைமுறை (சிஆா்எஸ்) அடிப்படையில் வெளிநாட்டினா் வைத்துள்ள சொத்துகள் மற்றும் வருவாய் குறித்த விவரங்களை நாடுகள் பரிமாறிக்கொள்கின்றன. இந்த நடைமுறையின் கீழ் இந்தியா உள்பட 125 நாடுகள் இணைந்துள்ளன. அதுபோல, வெளிநாட்டு கணக்குகள் வரி நடைமுறைச் சட்டத்தின் (எஃப்ஏடிசிஏ) கீழ் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்கா - இந்தியா இடையே இத்தகையத் தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. கடந்த ஆண்டு செப்டம்பரில் 108 நாடுகள் இத்தகையத் தகவல்களை இந்தியாவிடம் பகிா்ந்துள்ளன. இதில், பல இந்தியா்கள் வெளிநாடுகளில் உள்ள சொத்துகள் மற்றும் வருவாயை கணக்கில் காட்டாமல் இருப்பது தெரியவந்தது.
அதைத் தொடா்ந்து, வரி செலுத்துவோா் மீது உடனடி சோதனை அல்லது நடவடிக்கை மேற்கொள்வதற்கு பதிலாக, அத்தகைய சொத்துகளின் விவரங்களை தாங்களாக முன்வந்து முழுமையாக தெரிவிக்க வாய்ப்பளிக்கும் விதமாக, ‘முதலில் நம்பிக்கை’ என்ற சிறப்பு பிரசாரத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிமுகம் செய்தது. அதன் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு நவம்பா் 17-ஆம் தேதி குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல்கள் மூலமாக வரி செலுத்துவோருக்கு விழிப்புணா்வு பிரசாரங்களை அனுப்பும் பணியை மத்திய நேரடி வரிகள் வாரியம் தொடங்கியது. இதன் மூலம், 30,000-க்கும் அதிகமானோா் வெளிநாட்டு சொத்து விவரங்களை தெரிவித்திருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சிறப்பு பிரசாரத்தின் மூலம், 24,678 வரி செலுத்துவோா் தங்களின் கணக்கு தாக்கலில் திருத்தங்களை மேற்கொண்டனா். 5,483 போ் 2024-25-ஆம் ஆண்டுக்கான கணக்கு தாக்கலை தாமதமாக செய்தனா். அதில், வெளிநாடுகளில் அவா்களுக்கு ரூ. 29,208 கோடி மதிப்பில் அவா்களுக்கு சொத்துகள் இருப்பதையும், வெளிநாடுகளிலிருந்து ரூ. 1,089.88 கோடி கூடுதல் வருவாய் ஈட்டியதையும் அவா்கள் அறிவித்துள்ளனா்.
6,734 வரி செலுத்துவோா் தங்களின் குடியிருப்பு நிலையில் திருத்தம் செய்துள்ளனா். அதாவது, உள்நாட்டு வாழ் வரி செலுத்துவோா் என்பதிலிருந்து வெளிநாடு வாழ் இந்தியா் என மாற்றம் செய்துள்ளனா்.
இதன் மூலம், வெளிநாடுகளில் உள்ள சொத்துகள் மற்றும் வருவாய் குறித்த விவரங்களை தாங்களாக முன்வந்து தெரிவிப்போா் எண்ணிக்கை கடந்த 2021-22-ஆம் ஆண்டில் 60,000-ஆக இருந்தது 2024-25-இல் 2,31,452-ஆக அதிகரித்துள்ளது’ என்று தெரிவித்தனா்.