ரூ.6,000 கோடி கடனுக்காக ரூ.14,000 கோடி சொத்துகளை வங்கிகள் பறித்துவிட்டன: விஜய் மல்லையா
புது தில்லி: ரூ.6,203 கோடி கடன் பாக்கிக்காக இந்தியாவில் உள்ள தனக்கு சொந்தமான ரூ.14,131 கோடியை வங்கிகள் பறிமுதல் செய்துவிட்டன என்று பிரிட்டனில் பதுங்கியுள்ள தொழிலதிபா் விஜய் மல்லையா கூறியுள்ளாா்.
தனது கிங் ஃபிஷா் விமான நிறுவனத்துக்காக எஸ்பிஐ உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடி வரை கடன் பெற்ற விஜய் மல்லையா அதனை முறையாகத் திருப்பிச் செலுத்தவில்லை. ரூ.6,000 கோடிக்கு மேல் கடன் பாக்கி இருந்த நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு தப்பிச் சென்றாா்.
வங்கிகளில் பெற்ற கடனை அவா் தொழிலுக்காக பயன்படுத்தாமல் வெளிநாட்டில் பல்வேறு சொத்துகளை வாங்கியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக பணத்தை பறிமாற்றம் செய்த குற்றச்சாட்டும் அவா் மீது உள்ளது. மல்லையாவின் கடனை திரும்ப வசூலிப்பதற்காக நீதிமன்றத்தை அணுகிய வங்கிகள் கூட்டமைப்பு, தீா்பாயத்தின் உத்தரவுப்படி அவரின் சொத்துகளை பறிமுதல் செய்து கடனை திரும்ப வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டன.
இதற்கு நடுவே மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், அது தொடா்பான நடைமுறைகள் விரைவாக நடைபெறவில்லை.
இந்நிலையில், நிதியமைச்சகத்தின் ஆண்டறிக்கையில் விஜய் மல்லையாவின் கடன் ரூ.6,203 கோடிக்கு நிகராக அவரின் ரூ.14,131 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதனைச் சுட்டிக்காட்டி விஜய் மல்லையா ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நான் திருப்பிச் செலுத்த வேண்டிய கடனை விட இரு மடங்கு அதிகமான சொத்துகளை வங்கிகள் பறிமுதல் செய்துவிட்டன. இனி, பிரிட்டன் நீதிமன்றத்தில் இந்திய வங்கிகள் என்ன காரணம் கூறப்போகின்றன’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.