ரூ.99,000 கோடி காா்ப்பரேட் வரி வருவாய் சலுகைள் மூலம் இழப்பு: மத்திய நிதியமைச்சகம்
கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் சலுகைகள் காரணமாக, சுமாா் ரூ.99,000 கோடி பெருநிறுவன (காா்ப்பரேட்) வரி வருவாய் இழப்பு ஏற்பட்டது என்று மத்திய நிதியமைச்சம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகவ் சத்தா எழுப்பிய கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி எழுத்துபூா்வமாக அளித்த பதில்:
காா்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகைகள் காரணமாக, கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.98,999 கோடியை மத்திய அரசு இழந்துள்ளது. இந்தத் தொகை 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.88,109 கோடி, 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.96,892 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டு முதல் இதுவரையிலான காா்ப்பரேட் வரி வருவாய் இழப்பு குறித்த தகவல் இல்லை.
கடந்த மாா்ச் 31 வரை, வெளிநாட்டு கருப்புப் பணச் சட்டத்தின் கீழ், ரூ.35,105 கோடிக்கும் அதிகமாக வரி மற்றும் அபராதம் செலுத்த வரி செலுத்துவோரிடம் கோரப்பட்டுள்ளது என்றாா்.
கருப்புப் பணச் சட்டம் 2015-இன் கீழ், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்பவா்கள் வெளிநாடுகளில் தங்களுக்குள்ள சொத்துகள் மற்றும் வருமானம் குறித்து தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்.