ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 8 நாள்களாகியும் சிக்காத குற்றவாளி!
ரேஷன் அரிசி கடத்தியவா் குண்டா் சட்டத்தில் கைது
அவிநாசி அருகே ரேஷன் அரிசி கடத்திய நபரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவிநாசி அருகே தெக்கலூரில் உள்ள அரிசி ஆலைக்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா், மாவட்ட வழங்கல் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அரிசி ஆலையில் கடந்த மாதம் 27-ஆம் தேதி சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு திண்டுக்கல்லில் இருந்து 21 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அரிசியைக் கடத்தி வந்த கோவை, சிந்தாமணிப்புதூரைச் சோ்ந்த பொன்ரமேஷ் (49), தாராபுரத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் (42), அவிநாசியைச் சோ்ந்த பத்மநாபன் (40) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில், பொன்ரமேஷ் தொடா்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் மனீஷுக்கு போலீஸாா் பரிந்துரைத்தனா்.
இதையடுத்து, பொன்ரமேஷை குண்டா் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். இந்த உத்தரவுக்கான நகலை சிறையில் உள்ள பொன்ரமேஷிடம் போலீஸாா் வழங்கினா்.