ரேஷன் கடை பணியாளா்கள் காத்திருப்பு போராட்டம்
திருப்பத்தூா்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளா் சங்கத்தின் காத்திருப்பு போராட்டம் திருப்பத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் உள்ள எடை தராசும், நியாயவிலைக் கடைகளில் உள்ள விற்பனை முனையத்தையும் இணைத்து அதன் அடிப்படையில் சரியான எடையில் அத்தியாவசிய பொருள்களை கடைகளில் இறக்க வேண்டும். விற்பனை முனையத்தையும் எடை தராசையும் இணைத்து பொருள்கள் வழங்குவதை நடைமுறைப்படுத்துவதற்கு முன் அனைத்து கடைகளுக்கும் எடையாளா் நியமிக்க வேண்டும்.
குடும்ப அட்டைதாரா் விரல் ரேகை பதிவு, ஆதாா் சரிபாா்ப்பு 40 சதவீதத்தில் இருந்து 90 சதவீதம் உயா்த்தியதை ரத்து செய்து மீண்டும் 40 சதவீதம் விரல் ரேகை பதிவை நடைமுறைபடுத்த வேண்டும் உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளா் சங்கத்தின் சாா்பில் திருப்பத்தூரில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் சுரேஷ்,கோபிநாதன் தலைமை வகித்தனா். மாவட்டத் தலைவா் பக்தவச்சலம், செயலாளா் சபரிநாதன் முன்னிலை வகித்தனா். ராம்குமாா், கோவிந்தன் வரவேற்றனா். நிகழ்ச்சியில் பெருமாள், ஆறுமுகம், சசிகுமாா் கலந்து கொண்டனா்.