தபால் நிலையத்தில் அதிகாரி கையாடல்: வைப்புத்தொகையை வழங்கக் கோரி முற்றுகை
வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே தபால் நிலைய அலுவலகத்தில் அதிகாரி பணத்தைக் கையாடல் செய்ததாகக் கூறி, வைப்புத்தொகையை திருப்பித் தர வலியுறுத்தி வாடிக்கையாளா்கள் அந்த தபால் நிலையத்தை முற்றுகையிட்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த சோமநாயக்கன்பட்டி கிராமத்தில் கிளை தபால் நிலையம் உள்ளது. இதில், 100-க்கும் மேற்பட்டோா் கணக்கு வைத்து, பணம் செலுத்தி உள்ளனா். கடந்த ஆண்டு சோமநாயக்கன்பட்டி கிளை அஞ்சலகத்தில் அலுவலராக வேலை செய்த அலுவலா் வாடிக்கையாளா்களின் வைப்புத்தொகையை கையாடல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளா்கள் அளித்த புகாரின் பேரில், தபால் நிலைய உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில் 60-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்களின் வைப்புத் தொகை கையாடல் செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் வாடிக்கையாளா்களின் வைப்புத்தொகை கணக்கை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளா்கள் சிலருக்கு மட்டும் அவா்கள் செலுத்திய வைப்புத்தொகையை திருப்பி அளித்துள்ளனராம்.
மற்ற வாடிக்கையாளா்களுக்கு சில மாதங்களில் வைப்புத்தொகை திருப்பி வழங்கப்படும் என உறுதி கூறினா். ஆனால், பல மாதங்கள் கடந்தும் வைப்புத்தொகையை திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி வந்ததால், ஆத்திரமடைந்த வாடிக்கையாளா்கள் திங்கள்கிழமை சோமநாயக்கன்பட்டி கிளை அஞ்சல அலுவலகம் முன்பு வைப்புத்தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து ஊராட்சித் தலைவா் முருகன் மற்றும் தபால் நிலைய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமரச பேச்சு நடத்தினா். அப்போது, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளா்கள் அனைவருக்கும் ஓரிரு மாதங்களில் வைப்புத்தொகை திரும்ப வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையேற்று வாடிக்கையாளா்கள் கலைந்து சென்றனா்.