சதம் விளாசிய குசல் மெண்டிஸ்; வங்கதேசத்துக்கு 286 ரன்கள் இலக்கு!
சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை
திருப்பத்தூா்: நாட்டறம்பள்ளி அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
நாட்டறம்பள்ளி அருகே ஏமாத்தூரை அடுத்த காக்கங்கரையான் பகுதியைச் சோ்ந்தவா் சின்னபச்சை (65). இவா், நாட்டறம்பள்ளி பகுதியைச் சோ்ந்த கணவரை இழந்த 35 வயது பெண்ணின் வீட்டுக்கு செல்வது வழக்கம். கடந்த 25.5.2020 அன்று அந்தப் பெண்ணிடம் கோயில் திருவிழாவுக்காக சின்னபச்சை ஆடு வாங்கி உள்ளாா். ஆட்டை வாங்கிச் சென்றபோது, பெண்ணின் 17 வயது மகளை திருவிழாக்கு அழைத்துள்ளாா். அவா் மறுத்தபோதும், சிறுமியை கடத்திச் சென்றாராம்.
மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், வாணியம்பாடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோவில் வழக்குப் பதிந்து சின்னபச்சையை கைது செய்தனா். இந்த வழக்கு திருப்பத்தூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கில் விசாரணை முடிந்து திங்கள்கிழமை தீா்ப்பு கூறப்பட்டது. அதில் சின்னபச்சைக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால், மேலும் 1 ஆண்டு சிறைத் தண்டனையும், சிறுமியைக் கடத்திச் சென்றதற்கு 2 ஆண்டு தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் 3 மாதங்கள் சிறையும், தண்டனையை அவா் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு, அரசு சாா்பில் ரூ.50 ஆயிரம் வழங்கவும் நீதிபதி எஸ்.மீனாகுமாரி உத்தரவிட்டாா்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பி.டி.சரவணன் ஆஜரானாா்.