ரோலெக்ஸ் நிறுவனர் ஹான்ஸ், ஹிட்லரின் உளவாளியா? - வெளியானஅறிக்கை; இங்கிலாந்தில் அதிர்ச்சி!
பிரபல ரோலக்ஸ் கடிகார பிராண்டின் நிறுவனர் ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப், ஹிட்லரின் ஆட்சிக்கு ஆதரவு கொண்டிருந்ததாகவும் நாஜி உளவாளியாக இருந்ததாகவும் தி டெலிகிராஃப் அறிக்கை கூறுகிறது.
பிரபலங்கள் தொடங்கி பணக்காரர்கள் என அனைவரும் விரும்பும் ஒரு ஆடம்பர கடிகார பிராண்டாக ரோலக்ஸ் உள்ளது. இந்த கடிகாரத்தின் தனித்தன்மை காரணமாக பலரும் இதனை வாங்க விரும்புகின்றனர்.
இந்த ரோலக்ஸ் பிராண்டை ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப் என்பவர் உருவாக்கினார். ரோலக்ஸ் நிறுவனத்தின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாக நீர்ப்புகா தன்மைக்கொண்ட வாட்ச்கள் இடம்பெறுகின்றன. ரோலக்ஸ் வாட்ச்களுக்கு என ஒரு தனி அங்கீகாரம் சந்தைகளில் உள்ளது.

இந்த நிலையில் ரோலக்ஸ் நிறுவனர் ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப் ஒரு உளவாளியாக இருந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.
1941 மற்றும் 1943 -க்கு இடையில் எழுதப்பட்ட, முத்திரையிடப்பட்ட இரண்டாம் உலகப் போர் ஆவணங்களான MI5 , வில்ஸ்டோர்ஃப் "உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படுபவர்" என்று விவரிக்கின்றன.
அவர் பிரிட்டிஷ் குடிமகனாக இருந்த போதிலும் இரண்டாம் உலகப்போரின் போது நாட்டு நலன்களுக்கு அச்சுறுத்தலாக அவரை பார்த்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருப்பு பட்டியில் அவரை சேர்ப்பதற்கான பரிசீலனைகள் வந்ததாகவும் அவ்வாறு கருப்பு பட்டியலில் ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப்பை சேர்ப்பது வெளிநாட்டு வர்த்தகத்தை பாதிக்கும் என்று குறிப்பிடப்பட்டதாக ஆவணங்கள் வெளிப்படுத்தின.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த ரோலக்ஸ் நிறுவனம் இதுதொடர்பாக வரலாற்று ஆசிரியர்கள் குழுவை நியமித்ததாகவும் கூறியிருக்கிறது.
இந்த குற்றச்சாட்டுகளின் உணர்திறன் காரணமாக அந்த காலகட்டத்தில் ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப் சரியான பங்கை ஆராய்ச்சி செய்யும் அதிகாரப்பூர்வ வரலாற்று ஆசிரியர்கள் குழுவை ஏற்கனவே நியமித்துள்ளதாக ரோலக்ஸ் நிறுவனம் கூறியிருக்கிறது.

ஜெர்மனியில் பிறந்து, இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப் ஸ்விட்சர்லாந்தில் குடிப்பெயர்ந்தார். அதன் பின்னர் ரோலக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி அதனை மிகப்பெரிய வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் சென்று புகழின் உச்சத்தை அடைந்தார்.
உலக அளவில் புகழ்பெற்ற பிராண்டாக மாறியதற்கு முக்கிய பங்கு வகித்தார். இவரின் இறப்புக்குப் பின்னர் ரோலக்ஸ் நிறுவனத்தை தொண்டு நிறுவனம் தொடர்ந்து நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.