லாரியில் கடத்திய 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஓட்டுநா் கைது
பல்லடம் அருகே லாரியில் கடத்திய 11 டன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஓட்டுநரைக் கைது செய்தனா்.
பல்லடம் அருகே திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலை வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக திருப்பூா் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாருக்கு புதன்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் ஆய்வாளா் ராஜசேகரன், தனி வருவாய் ஆய்வாளா் காா்த்திக்குமாா் ஆகியோருடன் பல்லடம் வட்ட வழங்கல் துறையினா் மற்றும் போலீஸாா் அண்ணா நகா் பேருந்து நிறுத்தம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, 11 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
லாரி ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில், அவா் ஈரோடு மாவட்டம், பவானி காமராஜ் நகரைச் சோ்ந்த ஆனந்தன் (45) என்பதும், கோவையில் இருந்து சென்னிமலையில் உள்ள அரவை ஆலைக்கு ரேஷன் அரிசியைக் கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, ஆனந்தனைக் கைது செய்த போலீஸாா், 11 டன் ரேஷன் அரிசி, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.