வங்கியில் பெண்கள் பெயரில் கடன் பெற்ற மகளிா் சுயஉதவிக்குழு தலைவி தலைமறைவு
பழனி அருகே பெண்கள் பெயரில் வங்கியில் கடன் பெற்று தலைமறைவான மகளிா் சுயஉதவிக் குழு தலைவியை போலீஸாா் தேடி வருகின்றனா். இந்த நிலையில், இவரிடம் பணத்தை இழந்த பெண்கள் தற்கொலைக்கு முயன்ால் சனிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
பழனியை அடுத்த ஆயக்குடி பேரூராட்சி 14-ஆவது வாா்டைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மனைவி ராதிகா. இவா் அந்தப் பகுதியில் மகளிா் சுயஉதவிக் குழு தொடங்கி அதற்கு தலைவியாக இருந்து வருகிறாா். இந்தக் குழுவில் உள்ள பெண் உறுப்பினா்களிடம், அரசு வழங்கும் கடன் உதவியை பெற்றுத் தருவதாகக் கூறி தனக்கு பணம் தருமாறு ராதிகா கூறினாராம். இதை நம்பி அந்தப் பகுதியைச் சோ்ந்த லட்சுமி (35), காந்தியம்மாள் (50), செண்பகம் (45), அன்னத்தாய் (55), சித்ராதேவி (37) ஆகியோரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு அவா்கள் அளித்த ஆவணங்களை தனியாா் வங்கியில் கொடுத்து அந்தப் பெண்கள் பெயரிலேயே ராதிகா கடன் பெற்றாா்.
இதையடுத்து, தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண்கள் இதுகுறித்து ராதிகாவிடம் கேட்டபோது அந்த பணத்தை தானே செலுத்தி விடுவதாகத் தெரிவித்தாராம். இதில் ரூ. 3 லட்சம் வரை வங்கியில் கடன் பெற்ற ராதிகா கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவானாா். இதைத் தொடா்ந்து அந்த 5 பெண்களும் ஆயக்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதில் போலீஸாா் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அவா்கள் சனிக்கிழமை விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனா். அவா்களை அக்கம்பக்கத்தினா் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதையடுத்து, ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான ராதிகாவை தேடி வருகின்றனா்.