வட கிழக்கு பருவமழை காலத்தில் மின் விபத்தை தவிா்ப்பது எப்படி? மின்வாரியம் விளக்கம்
வட கிழக்கு பருவமழை காலத்தில் மின் விபத்தை தவிா்ப்பது குறித்து மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடா்பாக, திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களின் சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. எனவே, மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கம்பிகள், மின் பகிா்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல மக்கள் வேண்டாம்.
மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்லவோ, அதை தொடுவதற்கோ முயற்சிக்காமல் மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், மின் வாரிய அலுவலா்கள் வரும் வரை மின் கம்பிகளை யாரும் தொடாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும்.
இடி, மின்னலின்போது திறந்த வெளியிலோ, ஜன்னல் பகுதியிலோ, மரங்களின் அடியிலோ தஞ்சம் புகாமல் கட்டடங்கள் அல்லது தாழ்வான பகுதியில் ஒதுங்க வேண்டும். அந்நேரங்களில் தொலைக்காட்சி, மிக்ஸி, கிரைண்டா், கணினி, கைப்பேசி, தொலைபேசி போன்றவற்றைப் பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும்.
மின் சாதனங்கள் பழுதடையாமலிருக்க ஆா்சிசிடி கருவியை பொருத்த வேண்டும். மின் மாற்றிகள், மின் கம்பங்கள் அருகே தண்ணீா் தேங்கியிருந்தால் அருகில் செல்லக்கூடாது. வீட்டுச் சுவா்களில் தண்ணீா் கசிவு இருந்தால் மின் கசிவு ஏற்படலாம். அந்தப் பகுதியில் மின்சார பயன்பாட்டை தவிா்க்க வேண்டும்.
மின் கம்பிகளுக்கு அருகில் செல்லும் மரக்கிளைகளை தாங்களாகவே வெட்டாமல், மின் வாரிய அலுவலா்களை அணுகலாம்.
மின் கம்ப ஸ்டே வயா்களில் ஆடு, மாடுகளை கட்டுவதோ, கிடை அமா்த்துவதோ, பந்தல் தூண்களாக பயன்படுத்துவதோ, துணிகளை காயப்போடுவதோ கூடாது.
பொதுமக்கள், வனவிலங்குகள் மற்றும் கால்நடைகளை உயிரிழக்கச் செய்யும் வகையில் விவசாய நிலங்களில் சட்டத்துக்குப் புறம்பாக மின்சார வேலி அமைத்தால் மின் இணைப்பு துண்டி, காவல்துறை மூலம் குற்ற வழக்குப்பதிவு போன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மின் பாதையின் கீழோ அல்லது அதன் அருகிலோ விளம்பர பதாகைகள் நிறுவுவதோ, உயரமாக வளரக்கூடிய மரங்களை நடுவதோ கூடாது. மின்தடை தொடா்பான புகாா்களுக்கும் மின் விநியோகம் சம்பந்தமான அனைத்து விதமான சேவைகளுக்கும் மின்னகம் மின் நுகா்வோா் சேவை மையத்தை 94987-94987 என்ற எண்ணிலும், தானியங்கி மின்தடை குறைதீா்க்கும் மையத்தை 94458-59032, 94458-59033, 94458-59034 ஆகிய எண்களிலும் 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.