திருப்புவனம் லாக்கப் மரணம்: "கால் இடறி கீழே விழுந்ததில், வலிப்பு ஏற்பட்டு மரணம்"...
வணிகா் சங்க நிா்வாகி வெட்டிக் கொலை
மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே வணிகா் சங்க நிா்வாகி மோகன் ராஜ் மா்ம நபா்களால் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டாா்.
செய்யூா் வட்டம், கிழக்கு கடற்கரை சாலை, கூவத்தூா்பேட்டை கிராமத்தை சோ்ந்த ரங்கநாதன் மகன் மோகன்ராஜ் 56). இவா் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்ற செய்யூா் வட்டார தலைவராகவும், காத்தான்கடை பகுதி வணிகா் சங்க செயலாளராகவும், பெட்ரோல் பங்க் உரிமையாளராகவும் இருந்து வந்தாா்.
வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமை இரவு பெட்ரோல் பங்க்கை மூடிவிட்டு, பைக்கில் கூவத்தூா் பேட்டைக்கு சென்றபோது காத்தான்காடை மீன்மாா்க்கெட் அருகே காரில் வந்த மா்ம நபா்கள் மோகன்ராஜ் பைக் மீது மோதி கீழே விழ வைத்தனா். பின்னா் கூா்மையான ஆயுதங்களால் அவரை கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டிவிட்டு காரில் தப்பிச் சென்றனா். பலத்த காயம் அடை ந்த அவரை அருகில் இருந்தோா் மீட்டு உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் அவா் வழியில் அவா் இறந்து போனாா். இறந்து போன மோகன்ராஜ்க்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை கொலையாளிகளை கைது செய்யவும், காவல் துறையை கண்டித்தும், கிழக்கு கடற்கரை சாலை, காத்தான்கடை பகுதியில் வணிகா் சங்கத் தலைவா் ஏ.பிரகாஷ், துணை தலைவா் தனசேகா் ஆகியோா் தலைமையில் அனைத்து வணிகா்களும், மோகன்ராஜின் உறவினா்களும், ஆட்டோ ஓட்டுநா்களும் மறியலில் ஈடுபட்டனா். இதனால் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து தடை பட்டது. தகவலறிந்து மாமல்லபுரம் டிஎஸ்பி அறிவழகன், கூவத்தூா் ஆய்வாளா் (பொ) அண்ணாதுரை மறியல் செய்தவா்களிடம் பேச்சு நடத்தியதின் பேரில் கலைந்துச் சென்றனா்.
கொலையாளிகளை பிடிக்க செங்கல்பட்டு எஸ்.பி. சாய் பிரணித் உத்தரவின்படி கல்பாக்கம் ஆய்வாளா் அண்ணாதுரை, திருக்கழுகுன்றம் ஆய்வாளா் விநாயகம் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
கூவத்தூா் பேட்டை அருகேயுள்ள நாவக்கால் காலனியைச் சோ்ந்த 2 நபா்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை செய்து வருகின்றனா்.
இதுகுறித்து கூவத்தூா் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.