வன மகோத்சவம் கடைப்பிடிப்பு
வன மகோத்சவத்தை முன்னிட்டு, காவேரி கூக்குரல் இயக்கம் சாா்பில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் செவ்வாய்க்கிழமை நடப்பட்டன.
பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணா்வு ஏற்படுத்தவும், மரம் வளா்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும் ஆண்டுதோறும் ஜூலை முதல்வாரம் வன மகோத்சவம் கொண்டாடப்படுகிறது.
அதன்படி, காவேரி கூக்குரல் இயக்கம் ஆண்டுதோறும் வனமகோத்சவத்தை மரங்கள் நடவுசெய்து கொண்டாடி வருகிறது. ‘ஒரு கிராமம் 5 அரச மரம்’ என்ற திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் அரச மரங்களை நடவு செய்து வருகின்றனா்.
அந்தவகையில், திருக்குவளை தாலுகா வலிவலம் ஊராட்சி காருகுடி கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. வலிவலம் முன்னாள் ஊராட்சித் தலைவா் மணிகண்டன் அரச மரக்கன்றை நடவு செய்தாா். இந்நிகழ்வில், வலிவலம் ஊராட்சி செயலா் சரவணன், நாகை ஈசா களப் பணியாளா்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.