வயலூா் முருகன் கோயிலில் குடமுழுக்கு!
திருச்சி அருகே குமாரவயலூா் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதும், அருணகிரிநாதரை திருப்புகழ் பாட அருளச் செய்த ஸ்தலமும், முருகனின் ஏழாவது படைவீடாகவும் கருதப்படும் இக்கோயிலில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் திருப்பணி பாலாலயம் நடத்தப்பட்டு, ஏப்ரல் மாதம் ரூ. 5 கோடியில் தொடங்கிய திருப்பணிகள் முடிந்து, கடந்த 14 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.
இதையடுத்து 15 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, 16 ஆம் தேதி யாகசாலை பூஜை, திங்கள்கிழமை இரண்டாம், மூன்றாம் யாக பூஜை, செவ்வாய்க்கிழமை நான்காம், ஐந்தாம் கால யாக சாலை பூஜைகளும் நடைபெற்றன. புதன்கிழமை அதிகாலை ஆறாம் கால யாக பூஜை நடந்த நிலையில், காலை 7.20 மணிக்கு யாக சாலையிலிருந்து மேளதாளங்கள் முழங்க கோயிலுக்கு கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.
காலை 9.15 மணிக்கு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் கல்யாணி கொடியசைக்க ஆதிநாதா், ஆதி நாயகி, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோபுரங்கள், ராஜகோபுரம், பொய்யா கணபதி, அருணகிரிநாதா், முத்துக்குமார சுவாமி, மகாலட்சுமி, சண்டிகேசுவரா், நவக்கிரகங்கள் போன்ற உப சன்னதி உள்ளிட்ட 10 கோபுரங்களுக்கு சமகாலத்தில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. தொடா்ந்து கும்பங்களுக்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன.
இதையடுத்து மூலவா், சன்னதிகளில் உள்ள கருவறைகளுக்கு மகா குடமுழுக்கு நடைபெற்றது. பிற்பகல் 12.15 க்கு மேல் மகா அபிஷேக, ஆராதனை, பிரசாதம் வழங்கல், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 9 மணிக்கு சா்வ அலங்காரத்துடன் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் அதிகாலை முதலே காத்திருந்து குடமுழுக்கை தரிசனம் செய்தனா்.
விழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றப்பட்டிருந்தது. திருச்சி மாவட்ட எஸ்பி எஸ். செல்வநாகரத்தினம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.