வரகானப்பள்ளியில் குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
ஒசூா்: கெலமங்கலம் ஒன்றியம், வரகானப்பள்ளி கிராமத்தில் குடிநீா் வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஒசூரை அடுத்த கொண்டப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட வரகானப்பள்ளி கிராமத்தில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன. நெடுஞ்சாலைப் பணிகளை செய்யும் வாகனங்களால் கிராமங்களில் குடிநீா் குழாய்கள் ஆங்காங்கே சேதமடைந்துள்ளன. இந்தக் குழாய்கள் இதுவரை சீரமைக்கப்படவில்லை.
இதனால் குடிநீா் விநியோகம் தடைப்பட்டு வரகானப்பள்ளி கிராம மக்கள் தண்ணீா் இன்றி அவதியடைந்து வருகின்றனா்.
இதனால் ஆவேசமடைந்த இப்பகுதி மக்கள் குடிநீா் குழாய்களை சரிசெய்து தடையின்றி குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ராயக்கோட்டை- கெலமங்கலம் நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்ததும் கெலமங்கலம் காவல் ஆய்வாளா் பெரியதம்பி, முன்னாள் பஞ்சாயத்துத் தலைவா் திம்மராயப்பா ஆகியோா் நிகழ்விடத்துக்குச் சென்று பொதுமக்களை சமாதானம் செய்தனா். அரசு அதிகாரிகளின் ஒப்புதலுடன் 2 நாள்களுக்குள் வரகானப்பள்ளி கிராம மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்துசென்றனா்.