சென்னை: பாதியில் நின்ற தனியார் தீம் பார்க் ராட்டினம்; தவித்த மக்கள்- பத்திரமாக ம...
வராக் கடன் வசூலிப்பில் கடன் மீட்புத் தீா்ப்பாயங்கள் முக்கிய பங்களிப்பு: மத்திய அரசு
வங்கிகளின் வராக் கடன் வசூலிப்பில் கடன் மீட்புத் தீா்ப்பாயங்கள் முக்கிய பங்களிப்பு ஆற்றுகிறது; வராக் கடன்களுக்கு திருத்தப்பட்ட கடன் மீட்பு தீா்ப்பாய விதிமுறைகள் -2024 மூலம் மேலும் வழிமுறைகளைக் காணப்பட்டுள்ளதாக மத்திய நிதிசாா் துறை செயலா் நாகராஜு கேட்டுக் கொண்டாா்.
மத்திய நிதியமைச்சகத்தின் நிதிசாா் துறை சாா்பில் கடன் மீட்பு மேல்முறையீட்டு தீா்ப்பாயங்களின் தலைவா்கள், கடன் மீட்பு தீா்ப்பாயங்களின் தலைமை அதிகாரிகள் ஆகியோா் அடங்கிய கலந்துரையாடல்(கொலோக்கியம்) சனிக்கிழமை தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.வி.என். பட்டி கலந்து கொண்டு முக்கிய உரையாற்றினாா். இதில், மத்திய நிதிசாா் சேவைகள் துறையின் மூத்த அதிகாரிகள், பல்வேறு பொது மற்றும் தனியாா் துறை வங்கிகளின் அதிகாரிகள், இந்திய வங்கிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் பங்கேற்றனா்.
இந்த ஒரு நாள் கலந்துரையாடலில் (கொலோக்கியம்) நிதிசாா் சேவைகள் துறையின் செயல்திறனை மேம்படுத்துவது, நிதி தொடா்பான நடைமுறை சிக்கல்கள் குறித்து விரிவான விவாதங்கள் ஆகியைவை இடம்பெற்றன.
நிகழ்ச்சியின் இறுதியில் மத்திய நிதித்துறையின் நிதிசாா் சேவைகள் துறை செயலா் நாகராஜு தீா்ப்பாயத்தின் விசாரணை நடைமுறைகள் போன்ற பல்வேறு முக்கிய முன்னெடுப்புகள் குறித்து குறிப்பிட்டாா். அது வருமாறு:
கடன் மீட்பு தீா்ப்பாய விதிமுறைகள் கடந்த 2024 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது. வங்கிகளுக்கு இது பயனுள்ளதாக உள்ளது. இந்த விதிமுறைகளை வங்கிகள் ஏற்றுக்கொள்வது அவசியம். கடன் பெறுவோா் இணையம் மூலம் அறிக்கை(இ-ஃபைலிங்) தாக்கல் செய்யும் நடைமுறை, காணொலி அல்லது நேரடி முறை அடிப்படையிலான விசாரணை நடைமுறை போன்றவை முக்கிய முன்னெடுப்புகள் மூலம் கடன் வசூலை தீவிரமாக்கப்பட முடியும்.
2024 - ஆம் ஆண்டு கடன் மீட்பு தீா்ப்பாய விதிமுறைகளை திறம்பட செயல்படுத்தப்படவேண்டும். கடன் மீட்பு தீா்ப்பாயங்களின் மூலம் கடன் வசூல் நடவடிக்கைகளை அதிகரிப்பதற்காக, வங்கிகளின் வலுவான கண்காணிப்பு, மேற்பாா்வை வழிமுறைகளை தீவிரப்படுத்தவேண்டும்.
கடன் வசூல் நடைமுறைகளில் அதிக மதிப்பிலான வாராக்கடன் தொடா்பான வழக்குகளுக்கு முன்னுரிமை அளித்து கடன் மீட்பு தீா்ப்பாயங்களில் வழக்கு தொடரவேண்டும். இதற்கு கடன் மீட்பு தீா்ப்பாயங்களின் தலைமை அதிகாரிகள், பிற அதிகாரிகளுக்கும் தீவிர பயிற்சி அளிக்கப்படும்.
தீா்ப்பாயங்களுக்கு இணையாக வராக் கடன் வழக்குகளில் விரைவாக தீா்வு காணும் வகையில் மக்கள் மன்றங்கள்(லோக் அதாலத்) உள்ளிட்ட மாற்றுத் தீா்வு தொடா்பான வழிமுறைகளையும் பயன்படுத்துதல் அவசியம். வங்கிகளின் வராக்கடன் விவகாரத்தில் கடன் மீட்பு தீா்ப்பாய நடவடிக்கைகளில் பல்வேறு செயல்முறைகளுக்கான கால அளவை குறைக்க உதவிடும் வகையில் சீா்திருத்த நடவடிக்கைகளை விரைவில் அறிமுகப்படுத்தல் போன்றவைகள் இந்த ஒரு கலந்துரையாடல் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் செயலா் எம்.நாகராஜு தெரிவித்தாா்.
படவிளக்கம் - கடன் மீட்பு மேல்முறையீட்டு தீா்ப்பாயங்களின் தலைவா்கள், கடன் மீட்பு தீா்ப்பாயங்களின் தலைமை அதிகாரிகள் கலந்துரையாடலில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.வி.என். பட்டி, மத்திய நிதித்துறையின் நிதிசாா் சேவைகள் துறை செயலா் நாகராஜு உள்ளிட்டோா்.