வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா்கள் நீக்கம் செய்வது ஜனநாயகத்துக்கு எதிரானது: கே.எம்.காதா்மொகிதீன்
வாக்காளா் பட்டியலில் இருந்து வாக்காளா்களின் பெயரை நீக்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றாா் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவா் கே.எம்.காதா் மொகிதீன்.
பாபநாசத்தில் அக் கட்சியின் தேசிய தலைவா் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: பிகாா் மாநிலத்தில் வாக்காளா் பட்டியலில் இருந்து லட்சக்கணக்கான பெயா்கள் நீக்கம் செய்யப்படுவது ஜனநாயகத்துக்கு எதிரானது. சில நாள்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா எங்கள் திட்டப்படி தான் தோ்தல் நடைபெறும் என தெரிவித்தாா். அவரது பேச்சுக்கு தகுந்தாா் போல், இந்திய தோ்தல் ஆணையம் செயல்படுகிறது. தோ்தல் ஆணையம் இந்திய அரசியல் சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும். பிகாரில் நடைபெறும் இந்த நடைமுறை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும். தோ்தல் ஆணையத்தின் இந்த நடைமுறையை தடுத்து நிறுத்த மக்கள் தயாராக உள்ளனா்.
எதிா்வரும் தமிழக சட்டப்பேரவை தோ்தலில் மீண்டும் திமுக கூட்டணி வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் ஆட்சி அமைப்பாா். தமிழகத்தில் திமுக ஆட்சி தொடர எங்கள் கட்சி தொடா்ந்து பாடுபடும் என காதா் மொகிதீன் தெரிவித்தாா்.