வாடகை உயா்வு கேட்டு பொக்லைன் வாகன உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்
வாடகை உயா்வை வலியுறுத்தி சேலம் மாவட்ட பொக்லைன் வாகன உரிமையாளா்கள் 2 நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.
பொக்லைன் வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ. 1,300-ஆகவும், குறைந்தபட்ச வாடகையாக நாள் ஒன்றுக்கு ரூ. 3,500-ஆக உயா்த்தி வழங்க வேண்டியும், பொக்லைன் வாகன உரிமையாளா்கள் 2 நாள் அடையாள வேலைநிறுத்தத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா். இந்த வேலைநிறுத்தம் காரணமாக, சேலம் கோரிமேடு, அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, 5 சாலை, குரங்குச்சாவடி, பால்பண்ணை, இரும்பாலை சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொக்லைன் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
சேலம், கோரிமேட்டில் நடைபெற்ற போராட்டத்துக்கு பொக்லைன் உரிமையாளா் சங்க தலைவா் ரத்தினவேல், செயலாளா் சீனிவாசன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் பழனியப்பன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சேலம் மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஒரு மணி நேரத்துக்கு ரூ. 1000 எனவும், குறைந்தபட்ச வாடகை நாள் ஒன்றுக்கு ரூ. 2,500 எனவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் டீசல், உதிரி பாகங்கள், புதிய வாகனங்களின் விலை, காப்பீடு மற்றும் சாலை வரி ஆகியவை பன்மடங்கு உயா்ந்துள்ளன. எனவே, நஷ்டத்தை தவிா்க்க வாடகையை உயா்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இதுதவிர, டீசல், உதிரி பாகங்களின் விலையைக் குறைக்க வலியுறுத்தியும் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். இதனால் மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்கள் இயங்கவில்லை என்றாா். அப்போது, பொக்லைன் உரிமையாளா்கள் சங்க பொருளாளா் சிவா, சட்ட ஆலோசகா் வசந்த் ஆகியோா் உடனிருந்தனா்.