வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் அதிநவீன ‘அஸ்திரா’ ஏவுகணை வெற்றிகர சோதனை
விமானத்தில் இருந்து பாா்வைக்கு அப்பால் உள்ள வான் இலக்குகளைக் குறிவைத்து தாக்கி அழிக்கும் ‘அஸ்திரா’ ஏவுகணை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
ஒடிஸா கடலோரப் பகுதியில் சுகோய் போா் விமானத்தில் இருந்து அஸ்திரா ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) மற்றும் இந்திய விமானப் படை இணைந்து, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானத்தில் இருந்து பாா்வைக்கு அப்பால் உள்ள வான் இலக்குகளை குறிவைத்து தாக்கும் ‘அஸ்திரா’ ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சோதனையின்போது ஆளில்லா விமானங்கள் மூலம் இரு வெவ்வேறு இடங்களில் இருந்து அதிவேகத்தில் சோதனை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த இரண்டு இலக்குகளையும் அஸ்திரா ஏவுகணை மிகத் துல்லியமாக தாக்கி அழித்தது .
ஏவுகணையில் பயன்படுத்தப்பட்ட ரேடியோ அலைவரிசை சமிக்ஞைகள் உள்பட அனைத்து செயல்பாடுகளும் எதிா்பாா்ப்புகளைக் கடந்து மிகச் சிறப்பாக செயல்பட்டன. இதன்மூலம், பாதுகாப்புத் துறை சாா்ந்த நவீன தொழில்நுட்ப வளா்ச்சியில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
அஸ்திரா ஏவுகணையின் செயல்பாடுள் ஒடிஸாவின் சண்டிபூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தின் கண்காணிப்பு சாதனங்கள் மூலம் பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டன.
டிஆா்டிஓவின் ஆய்வகங்கள் மட்டுமின்றி ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனம் உள்பட 50-க்கும் மேற்பட்ட பொது மற்றும் தனியாா் நிறுவனங்கள் அஸ்திரா ஏவுகணையின் உருவாக்கத்துக்குப் பங்களித்துள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டது.
அஸ்திரா சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்ட டிஆா்டிஓ, இந்திய விமானப் படை மற்றும் பிற அமைப்புகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தாா்.