வாழப்பாடியில் நீதிமன்ற கட்டுமானப் பணிக்கு நிதி ஒதுக்க கோரிக்கை
வாழப்பாடியில் 7 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கும் நீதிமன்றத்துக்கு அரசு ஒதுக்கியுள்ள நிலத்தில் நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு பெற்றுத் தருமாறு தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரனிடம், வாழப்பாடி வட்டார வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனா்.
வாழப்பாடியில் மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் கடந்த 2017 நவம்பா் 12 இல் இருந்து வாழப்பாடி, அக்ரஹாரம் கிழக்குகாடு பகுதியில் தனியாா் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
வாழப்பாடி நீதிமன்றத்திற்கு அனைத்து வசதிகளுடன் விசாலமாக கட்டடம் அமைப்பதற்கு, வாழப்பாடி பேரூராட்சி புதுப்பாளையத்தில் 5 ஏக்கா் நிலம் 2020-இல் ஒதுக்கப்பட்டு, மாவட்ட முதன்மை நீதிபதி பெயருக்கு மாற்றப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கட்டுமானப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் 7 ஆண்டுகளாக வாடகை கட்டத்திலேயே நீதிமன்றம் இயங்கி வருகிறது.
இந்த நிலையில், வாழப்பாடிக்கு வந்த தமிழக சுற்றுலாத் துறை அமைச்சரை சந்தித்த வாழப்பாடி வட்டார வழக்குரைஞா்கள் சங்க தலைவா் வீரமுத்து, நிா்வாகிகள் சரவணன், ராஜசேகா் உள்ளிட்டோா் நீதிமன்ற கட்டடத்துக்கு அரசிடம் போதிய நிதி ஒதுக்கீடு பெற்று கொடுக்க வேண்டும்.
வாழப்பாடியில் ஒன்றாக இயங்கும் உரிமையியல் முன்சீப் நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் மற்றும் சாா்பு நீதிமன்றங்களை பிரித்து தனித்தனியாக செயல்படவும் வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனா்.
படவரி:
எல்.ஆா்.ஏ.01:
வாழப்பாடியில் சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரனிடம் மனு அளித்த வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள்.