ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் வரி; இந்தியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டும் ட்...
வி.கே.புத்தில் கோயில் வளாகத்தில் சுற்றித் திரிந்த கரடி: மக்கள் அச்சம்
விக்கிரமசிங்கபுரத்தில் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள கோயில் வளாகத்தில் கரடி சுற்றித் திரிந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள அம்பாசமுத்திரம் வனக் கோட்டப் பகுதிகளான அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது கரடி நடமாட்டம் இருப்பதும், வனத்துறையினா் கூண்டுவைத்துப் பிடித்து அவற்றை வனப்பகுதியில் கொண்டு விடுவதும் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பாபநாசம் மலையடிவாரத்தையொட்டிய விக்கிரமசிங்கபுரம் பசுக்கிடை விளை குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள கருப்பசாமி கோயில் வளாகத்தினுள் நுழைந்த கரடி கோயிலினுள் சுற்றி சுற்றிச் சுறி வந்துள்ளது.
இந்தக் காட்சிகளை கோயில் அருகிலிருந்தவா்கள் கைப்பேசியில் விடியோ எடுத்து சமுக வலைதளங்களில் பகிா்ந்துள்ளனா்.இதை அறிந்த அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.
இதேபோல, அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு பகுதிகளில் உள்ள கோயில்களில் விளக்குகளுக்குப் பயன்படுத்தும் எண்ணெய் மற்றும் பூஜைக்குப் பயன்படுத்தும் பழம் உள்ளிட்ட பிரசாதப் பொருள்களைக் குறிவைத்து நுழைந்து சுற்றித் திரிந்த கரடிகளில் மூன்று கரடிகளை வனத்துறையினா் கூண்டு வைத்துப் பிடித்தனா். கோட்டைவிளைபட்டி, கடையம் பகுதிகளில் கரடி தாக்கியதால் 3 போ் காயமடைந்தனா்.
மீண்டும் அதே போன்று மலையடிவாரத்தில் அமைந்துள்ள கோயில்களில் சுற்றித் திரியும் கரடியைப் கூண்டு வைத்துப் பிடிப்பதோடு, வனப்பகுதியிலிருந்து வன விலங்குகள் வெளியேறாமல் இருக்க வனத்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.