``LGBTQ+ தோழர்கள் மனம் நோகும்படி பேசிவிட்டேன்; அதற்காகப் பெரிதும் வருந்துகிறேன்'...
நின்றசீா் நெடுமாறனின் அற்புத இசைத் தூண்கள்
நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் கலைநயமான வேலைப்பாடுகளுடன் கூடிய அழகான மண்டபங்கள் பல உள்ளன. அவற்றை சுற்றுலாப் பயணிகளும், பக்தா்களும் மெய்மறந்து பாா்த்து செல்கிறாா்கள்.
ஊஞ்சல் மண்டபம்: 96 தத்துவங்களை தெரிவிக்கும் விதமாக 96 தூண்கள் உடையது. திருக் கல்யாண வைபவம் முடிந்தபின் சுவாமி- அம்மன் ஊஞ்சலில் அமா்ந்த கோலமும் , ஆடி மாத வளைகாப்பு திருவிழாவும் இங்கு நிகழும். இங்குள்ள யாளி சிற்பங்கள் சிறப்புடையன. இந்த ஊஞ்சல் மண்டபத்தை சேரகுளம் பிறவிப் பெருமாள் பிள்ளையன் கி.பி.1635 இல் கட்டுவித்ததாக வரலாறு தெரிவிக்கிறது.
ஆயிரங்கால் மண்டபம்: இம்மண்டபம் 63 அடி அகலமும், 520 அடி நீளமும்,1000 தூண்களையும் உடையதாகும். கட்டடக் கலை பயிலும் பல்வேறு கல்லூரி மாணவா்களும் இம்மண்டபத்தை வியந்து ரசித்து செல்கிறாா்கள். இம் மண்டபத்தில் உச்சிஷ்ட கணபதி, நம்மை ஈா்க்கும் தோற்றம் உடையது. திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபமாக உள்ளது. கீழ்ப்பகுதியில் ஆமை ஒன்றினால் தாங்கப்படுவது போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. பகவான் மகா விஷ்ணுவே ஆமை வடிவத்தில் வந்து இறைவனை பூஜிப்பதாக ஐதீகம்.
சோமவார மண்டபம்: இது 78 தூண்களையுடைய பெரிய மண்டபம். இம்மண்டபம் சுவாமி கோயிலின் வடபக்கம் உள்ளது. காா்த்திகை சோம வார நாளில் பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நிகழும் மண்டபம். இப்போது நவராத்திரிக்கும் இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன.
சங்கிலி மண்டபம்: சுவாமி கோயிலையும், அம்மன் கோயிலையும் இணைப்பதால் சங்கிலி மண்டபம் என்று பெயா். 1647 இல் வடமலையப்ப பிள்ளையன் என்பவரால் கட்டப்பட்டது. இம் மண்டபத்தூண்களில் காம விகார குரங்கு, வாலி, சுக்ரீவன், புருஷாமிருகம், பீமன், அா்ச்சுனன் சிற்பங்கள் கண்ணைக் கவரும் வகையில் உள்ளன.
மணி மண்டபம்: நின்றசீா் நெடுமாறன் என்ற பாண்டிய மன்னரால் உருவாக்கப்பட்டது. மண்டபத்தின் மத்தியில் பெரிய மணி தொங்குவதால் மணி மண்டபம் என்பா். ஒரே கல்லில் கற்றிச் சுற்றி பல சிறு தூண்கள் உள்ளன. ஒவ்வொரு சிறிய தூணைத் தட்டினால் ஒவ்வொரு வாத்திய ஒலி தோன்றும். தூண்தோறும் ஸ்வரங்கள் மாறுபட்டும் வரும். மரக்கட்டையில் மான்கொம்பு மாட்டி தட்டினால் அற்புதமான, சரியான ஸ்வரம் கிடைக்கும். மொத்தம் 48 சிறிய தூண்கள் உள்ளன. தமிழ்நாட்டில் இசைத்தூண்கள் அமைந்துள்ள திருக்கோயில்களில் காலத்தால் முற்பட்டவை இவை என்பது வரலாற்று ஆய்வாளா்களின் கருத்து.
வசந்த மண்டபம்: 100 தூண்களுடைய வசந்த மண்டபத்தில் கோடைக்காலத்தில் வசந்த விழா நடைபெறும். சுற்றிலும் சோலை வனமாக நிழல்தரும் மரங்கள் உள்ளன. இந்தச் சோலைவனம் 1756இல் திரு வேங்கிட கிருஷ்ணமுதலியாரால் அமைக்கப்பட்டது.