விகடன் இணையதளம் முடக்கம்: "கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ள செய்தது விசுவாசிகளே" - கமல் காட்டம்
விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் கை, கால் விலங்கிடப்பட்டு அழைத்துவரப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்திற்குள்ளானது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்குக் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து உடனே பேசவில்லை. இதனைக் கண்டிக்கும் வகையில் 'விகடன்' ஒரு கேலிச்சித்திரம் வெளியிட்டிருந்தது. அதற்கு மத்திய அரசு விகடன் இணையத்தளத்தை முடக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக மத்திய அரசிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.

விகடன் இணையதளம் முடக்கப்பட்டது பேச்சுரிமை, கருத்துரிமையைப் பறிக்கும் செயல் எனப் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தலைவர் சீமான், த.வெ.க தலைவர் விஜய் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் 'விகடன் இணையதளம் முடக்கப்பட்டது ஜனநாயகத்திற்கு எதிரானது' எனக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் தலைவர் கமல்ஹாசன், "ஆனந்த விகடனின் எல்லா கருத்துக்களுடனும் ஒத்துப்போவது என் கடமை அல்ல. விகடன் தன் கருத்தைச் சொல்லும் உரிமையை யார் பறிக்க முயன்றாலும் கடுமையாக எதிர்த்து அந்த வழிப்பறியைத் தடுக்க வேண்டியது என் கடமை. கட்சியின் மத்தியத் தலைமையைத் திருப்திப்படுத்த மாநிலத் தலைமை வெட்டிய இந்தச் சிறுகிணறு, பேச்சுரிமை எனும் பெரும்பூதத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மட்டுமே புரிந்து ரசித்திருக்கும் ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விசுவாசிகளே நினைத்துப் பார்க்காத விஸ்வரூபம்.
ஆனந்த விகடனின் எல்லா கருத்துக்களுடனும் ஒத்துப்போவது என் கடமை அல்ல. @vikatan தன் கருத்தைச் சொல்லும் உரிமையை யார் பறிக்க முயன்றாலும் கடுமையாக எதிர்த்து அந்த வழிப்பறியைத் தடுக்க வேண்டியது என் கடமை.
— Kamal Haasan (@ikamalhaasan) February 16, 2025
கட்சியின் மத்தியத் தலைமையைத் திருப்திப்படுத்த மாநிலத் தலைமை வெட்டிய இந்தச்…
'மக்கள் நீதி மய்யம்' மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறது. எங்கள் பேச்சுரிமை மீதோ, மொழியின் மீதோ கை வைத்த எந்த யானையையும் அடிசறுக்க வைக்கும் தமிழ்நாடு. இதைச் சொல்லும் தைரியத்தை ஆயிரமாண்டு தமிழ்ச் சரித்திரம் தருகிறது எங்களுக்கு. வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்; வாழிய இந்திய மணித்திருநாடு!" என்று 'விகடன்' நிறுவனத்திற்கு ஆதரவாகவும், கருத்துரிமைக்கு ஆதரவாகவும் தனது குரலை ஒலித்திருக்கிறார் கமல்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play