செய்திகள் :

விகடன் கார்ட்டூன் விவகாரம் : இதுவரை நடந்தவை, அடுத்து என்ன? - விரிவான தகவல்கள்

post image

விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான ஒரு அரசியல்ரீதியான கார்ட்டூன் சம்பந்தமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், யாருமே எதிர்பார்க்காத சமயத்தில் திடீரென விகடனின் இணையதளம் (www.vikatan.com) சில நாட்களுக்கு முன்பு முடக்கப்பட்டது. எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் எடுக்கப்பட்ட இந்த முடக்க நடவடிக்கை கருத்துச்சுதந்திரம் சார்ந்து பல தரப்பினருடைய கண்டனங்களை பெற்றிருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் இதுவரை நடந்தவை என்ன? விகடன் அடுத்து என்ன செய்யப் போகிறது என்பதைப் பற்றிய விரிவான தகவல்கள் இங்கே.

பிப்ரவரி 10

சர்ச்சையை கிளப்பிய அந்த கார்ட்டூன் பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியான விகடன் ப்ளஸ் இதழின் அட்டைப்படமாக வந்திருந்தது.

பிப்ரவரி 15

இதனைத் தொடர்ந்துதான் பிப்ரவரி 15 ஆம் தேதி தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கும் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கும் அந்த கார்ட்டூன் ஆட்சேபனைக்குரியதாக இருப்பதாக புகார் கொடுத்தார். பா.ஜ.க ஆதரவாளவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபடும் திட்டத்தில் இருந்ததாகவும் தெரிகிறது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

அண்ணாமலை புகார் கூறிய பிப்ரவரி 15 ஆம் தேதி அன்று மாலை 6 மணியிலிருந்து விகடன் இணையதளம் பல வாசகர்களுக்கும் வேலை செய்யவில்லை.

இதே சமயத்தில் Press Bureau of India வை சேர்ந்த அதிகாரிகள் விகடன் அலுவலகத்துக்கு விசாரணைக்காக வந்திருந்தனர். `விகடன் ப்ளஸ் இதழ் அச்சிலும் வெளியாகிறதா?' என்பது குறித்து விசாரித்துச் சென்றனர். விகடன் தரப்பில் அந்த விகடன் ப்ளஸ் இதழ் அச்சில் வெளியாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதெல்லாம் நடந்துகொண்டிருந்த சமயத்திலேயே, விகடன் இணையதளத்தில் வாசகர்களின் வருகை வெகுவாக குறைவதை விகடனின் தொழில்நுட்பக் குழு கண்டறிந்தது. விஷயத்தை டொமைன் சேவை வழங்கும் நிறுவனத்திடமும் இணையதள சேவை வழங்கும் நிறுவனத்திடமும் எடுத்து சென்றனர். ஆனாலும், பிரச்சனைக்கு என்ன காரணம் என்பதை பற்றி தெளிவான விடை கிடைக்கவில்லை.

பிப்ரவரி 16

விகடன் இணையதளம் முடக்கப்பட்டது பற்றி பலவிதமான கருத்துகளும் பேசப்பட்டு வந்த நிலையில், பிப்ரவரி 16 ஆம் தேதி விகடன் தரப்பில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தையும் தேசிய தகவல் மையத்தையும் இணையதளம் முடக்கப்பட்டது சார்ந்து விளக்கம் கேட்டு தொடர்புகொள்ளப்பட்டது.

பிப்ரவரி 16 அன்று மாலை 5:59 மணியளவில், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் விகடனுக்கு ஒரு செய்தி அனுப்பப்பட்டது. தகவல் தொடர்பு விதிகள் 2021 இன் படி அமைக்கப்பட்ட அவர்களின் துறைசார்ந்த கமிட்டி கூடி விகடன் இணையதளம் முடக்கப்பட்டது சம்பந்தமாக ஆய்வு செய்யப்போவதாக கூறினார்கள்.

பிப்ரவரி 17

இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 17 ஆம் தேதி, விகடன் தரப்பில் அந்த கமிட்டி முன் ஆஜராக பிப்ரவரி 20 தேதி வரை அவர்களுக்கான பதிலை தயார் செய்ய கால அவகாசம் கேட்கப்பட்டது. மேலும், விகடனின் தளம் முடக்கப்பட்டதற்கான முறையான காரணமும் கேட்கப்பட்டது.

விகடன் கேட்டுகொண்ட பிறகு, தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் பிப்ரவரி 15 ஆம் தேதி விகடன் தளம் முடக்கப்பட்டதை அவர்களே உறுதி செய்தனர்.

விகடன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, கமிட்டி முன் பதிலளிக்க பிப்ரவரி 20 ஆம் தேதி வரை கால அவகாசமும் கொடுத்தனர். ஆனாலும், அந்த துறைசார்ந்த கமிட்டியின் செயல் வரைமுறைகள் எப்படி இருக்கும் என்பதை பற்றி எதுவும் கூறவில்லை. அவை ரகசியமானவை எனவும் கூறப்பட்டது. மேலும், பிப்ரவரி 20 ஆம் தேதி அவசர நடவடிக்கையின் பேரில் எடுக்கப்பட்ட அந்த இணையதள முடக்கம் தொடரும் என்றும் கூறினர்.

கடந்த 99 ஆண்டுகளாக பத்திரிகை தர்மத்தையும் கருத்துச்சுதந்திரத்துக்கான உரிமையையும் விகடன் உயர்த்திப் பிடித்து வருகிறது. விகடன் மீது அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை அரசின் ஒழுங்குமுறை மேற்பார்வை மற்றும் பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றுக்கிடையே இருக்கும் சமநிலை சார்ந்த கவலைகளை எழுப்புகிறது.

'மாநில மற்றும் தேசிய அளவில் அரசுகள் எப்போதெல்லாம் தங்கள் பொறுப்பை உணராமல் செயல்படுகிறார்கள் என்பதை அறிகிறோமோ, அப்போதெல்லாம் நையாண்டியாக கார்ட்டூன்களை வரைந்திருக்கிறோம்.

சட்டரீதியான நடவடிக்கைகளை நாங்கள் மதிக்கிறோம். அதேநேரத்தில், ஒரு ஊடக நிறுவனத்தின் மீது எடுக்கப்படும் நடவடிக்கை வெளிப்படைத்தன்மைமிக்கதாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும். விகடன் தளம் முடக்கப்பட்ட விவகாரத்தில் எந்தத் தெளிவும் இல்லை என்பது வருத்தத்தைக் கொடுக்கிறது.' இதுதான் விகடனின் நிலைப்பாடு.

தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் துறை சார்ந்த கமிட்டி முன், வருகிற பிப்ரவரி 20 ஆம் தேதி விகடன் தரப்பு வாதத்தை முன் வைப்போம்.

அதேமாதிரி, இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணையையும் எதிர்பார்க்கிறோம். அங்கு எடுக்கப்படும் முடிவு பத்திரிகை சுதந்திரம் சார்ந்த கோட்பாடுகளுக்கு உட்பட்டதாக இல்லையெனில், சட்டரீதியான போராட்டத்துக்கும் விகடன் தரப்பில் தயாராகவே இருக்கிறோம்.

அரசின் நடவடிக்கைகளை விகடன் எதிர்கொள்வது இது முதல் முறையல்ல. 1942 இல் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் விகடனின் செயல்பாடுகள் முழுமையாக முடக்கப்பட்டது. 1987 இல் விகடனின் ஆசிரியர் சிறைவைக்கப்பட்டார். பல்வேறு அரசாங்களின் கீழ் பலமுறை அவதூறு வழக்குகளை சந்தித்திருக்கிறது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகியிருக்கும் நிலையில், அத்தனை பேரின் கவனமும் பிப்ரவரி 20 ஆம் தேதி நடக்கவிருக்கும் விசாரணையின் மீதுதான் இருக்கிறது. இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் சார்ந்த மிக முக்கியமான விவரணையை கொடுக்கக்கூடியதாக அந்த விசாரணை இருக்கும்.!

`மஸ்க் இந்தியாவில் தொழிற்சாலை தொடங்கினால், அமெரிக்காவுக்கு நியாயமாக இருக்காது’ - ட்ரம்ப் ஓப்பன் டாக்

நேற்று முன்தினம் (இந்திய நேரப்படி நேற்று) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் இருவரும் இணைந்து தந்த நேர்காணல் ஒளிபரப்பானது.அந்த நேர்காணலில் பல்வேறு விஷயங்கள் பற்றி இருவரும் பகிர்... மேலும் பார்க்க

Trump : `ஜெலன்ஸ்கி சர்வாதிகாரி..!' - உக்ரைன் அதிபருக்கு எதிராக திரும்பும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது?

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாடு மீது ரஷ்யா போர் தொடுத்தது. 3 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப்போரை நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி : `சாட்சியளிக்க வராமல் புறக்கணித்த விவரங்கள்' - ஆதாரத்தோடு ED வழங்கிய புதிய மனு

செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்திருக்கிறது.அ.தி.மு.க ஆட்சி காலத்தில் போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட வேலைகளை ப... மேலும் பார்க்க

டெல்லிக்கு மீண்டும் பெண் முதல்வர்: முதல்முறையாக வெற்றி பெற்ற ரேகா குப்தா நாளை முதல்வராக பதவியேற்பு!

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சி தோல்வியை சந்தித்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்து சில நாட்கள் ஆன ... மேலும் பார்க்க