காயமடைந்தவரை நம்.4இல் விளையாட வைத்தவருக்கு சாம்பியன்ஸ் டிராபியை தரலாம்!
விஜய நகர காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சோமசமுத்திரம் கிராமத்தில் விஜயநகர காலத்து கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
இந்தக் கிராமத்தில் அமைந்துள்ள சோமநாதஈஸ்வரா் கோயிலில் கிராம மக்கள் சீரமைத்து வருகின்றனா். இந்தப் பகுதியைச் சோ்ந்த அருள் அளித்த தகவலின்பேரில், விழுப்புரத்தைச் சோ்ந்த எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன் கள ஆய்வில் ஈடுபட்டாா்.
அப்போது, அவா் விஜயநகர காலத்து கல்வெட்டுகளை கண்டறிந்தாா். இதுகுறித்து அவா் கூறியது:
இந்தக் கோயில் திருப்பணிக்காக அகற்றப்பட்ட கற்கலில் கல்வெட்டுகள் காணப்படுகிறது. இந்தக் கல்வெட்டுகளை வாசித்த புதுச்சேரியைச் சோ்ந்த மூத்த கல்வெட்டு ஆய்வாளா் விஜயவேணுகோபால் விஜய நகர காலத்து கல்வெட்டுகள் என கூறினாா்.
இந்தக் காலத்தில் விஜயநகர பேரரசின் மகா மண்டலீஸ்வரராக குமார கம்பனாா் இருந்த போது, இவரது ஆட்சியில் இந்தப் பகுதி பல்குன்றக்கோட்டம் சிங்கபுர நாட்டுக்கு உள்பட்டு இருந்துள்ளது. கிராமத்தில் கிடைக்கும் வருவாய் மூலம் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை துண்டு கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. 658 ஆண்டுகள் பழமை வாயந்த இந்தக் கல்வெட்டுகளை கிராம மக்கள் உரிய முறையில் பாதுகாக்க வேண்டும். இந்தப் பகுதியில் மேலும் ஆய்வுகள் நடத்தினால் சோமசமுத்திரம் குறித்த வரலாற்று விவரங்கள் கிடைக்கும் என்றாா்.