காட்பாடி: அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு - சிக்கலில் மகன் கத...
`விஜய் மற்ற மாநிலங்களை பார்த்துவிட்டு வரட்டும்!’ - சட்டம் ஒழுங்கு குற்றச்சாட்டுக்கு ரகுபதி காட்டம்
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,
“அ.தி.மு.க போராட்டம் என்பது எள்ளி நகைக்க கூடிய ஒன்று. அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தான் பொள்ளாச்சி சம்பவம் நடைபெற்றது. அப்போது, எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்று அடங்காப்பிடாரித்தனமாக மறுத்தவர்கள் அவர்கள். கடைசியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி நாங்கள் அன்று நடவடிக்கை எடுக்க வைத்தோம். இன்று நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. இப்பொழுது அ.தி.மு.க போராட்டம் என்பதெல்லாம் வீண் வேஷம். நாங்கள் இருக்கிறோம் என்று காண்பித்து கொள்வதற்காக அ.தி.மு.க-வினர் இப்படி கபட நாடகத்தை ஆடுகிறார்கள். தங்கள் மீது உள்ள குற்றச்சாட்டுக்களை மறந்து விட்டு எங்கள் மீது பழி சுமத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பார்க்கிறார்கள்.
பொள்ளாச்சி சம்பவம் ஒன்று போதும்...அவர்கள் ஆட்சி காலத்தில் எப்படி இருந்தது என்று. அதற்குப் பிறகு, என்னென்ன நடந்தது...அவர்கள் ஆட்சியில் என்பதெல்லாம் ஏற்கனவே நான் விளக்கிவிட்டேன். அண்ணா பல்கலைக்கழக வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற தேவை இல்லை என்று நீதிமன்றமே கூறிவிட்டது. மூன்று துணை ஆணையர்களை நியமித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வழக்கில் எஃப்.ஐ.ஆர் கசிந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. எஃப்.ஐ.ஆர் கசிந்தது யார் மூலமாக இருந்தாலும் நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழு விசாரித்து நடவடிக்கை எடுக்கும்.
இந்த ஆட்சியில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. பெண்கள் வெளியே வருகிறார்கள். மகாத்மா காந்தி நடு இரவில் ஒரு பெண் தங்க நகைகளை அணிந்து கொண்டு சுதந்திரமாக நடமாடி சென்று பத்திரமாக வீடு திரும்பிகின்ற பொழுது தான் உண்மையான சுதந்திரம் என்று தெரிவித்திருந்தார். அது, இந்தியாவிலேயே கடைப்பிடிக்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு தான் இருக்கிறது. மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்று பார்த்துவிட்டு வரட்டும். அங்கு பெண்களின் நிலைமை எப்படி இருக்கிறது... இரவு 10 மணிக்கு மேல் நடமாட முடிகிறதா என்று. நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொல்லுகின்ற விஜய்க்கு இதைத்தான் பதிலாக சொல்கின்றோம்.
தயவுசெய்து வெளியே சென்று பாருங்கள். பக்கத்து மாநிலம் பீகாரில் சென்று பாருங்கள். ஒரிசாவில் சென்று பார்த்துவிட்டு வாருங்கள். வேறு மாநிலத்திற்கு சென்று பாருங்கள். அங்கே எல்லாம் பார்த்துவிட்டு வந்து இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்று நிரூபிக்கின்றோம். இல்லையென்றால் நீங்கள் என்ன சொன்னாலும் மக்கள் எங்களை நம்புவார்கள். மக்கள் மத்தியில் நாங்கள் விளக்குவோம்.
யார் அந்த சார் என்பது அந்த சாருக்கு தான் தெரியும். யார் அந்த சார் என்பது விசாரணையில் தெரியவரும். நாங்கள் இல்லை... அந்த சார் எல்லாம். அரசு விதிகளுக்கு உட்பட்டதால் அரசு அதிகாரிகள் பேட்டி கொடுக்கிறார்கள். இந்த விவகாரத்தில் அதிகாரிகள் அவசரப்பட்டார்களா என்பதை ஐ.பி.எஸ் படித்த மூன்று பெண் துணை ஆணையர்களை நீதிமன்றம் நியமித்துள்ளது. அந்தக் குழு விசாரித்து உண்மையை வெளிக்கொண்டுவரும்.
எங்கடா காலையில் பிணம் விழும் என்று பிணம் கொத்தி கழுகு என்று சொல்வதை போல எந்த பிணமாவது விழுந்தால் அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடலாமா என்று பார்க்கின்ற பரிதாபகரமான நிலையில் லண்டன் சென்று படித்துவிட்டு வந்திருக்கின்ற பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் நிலைமை இருக்கிறது” என்றார்.